மனைவி தாலியை கழற்றியதால் விவாகரத்து: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

தாலியை கழற்றி வைப்பது என்பது, கணவருக்கு அதிகபட்ச மனவலியை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு விவாகரத்து வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


சென்னை: பிரிந்து வாழும் மனைவி, தனது மாங்கல்யம் எனப்படும் தாலியை கழற்றி வைப்பது என்பது, கணவருக்கு அதிகபட்ச மனவலியை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு விவாகரத்து வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம். வேலுமணி மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஈரோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் சி. சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து, இந்த தீர்ப்பை வழங்கியது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி உள்ளூர் குடும்பநல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து வழங்க மறுத்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

சிவக்குமாரிடமிருந்து பிரிந்து வாழும் மனைவியிடம் விசாரித்தபோது, அவர் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்தபோது, திருமணத்தில் கணவரால் கட்டப்பட்ட மாங்கல்யத்தை கழற்றிவைத்திருந்ததை ஒப்புக் கொண்டார்.

ஆனால், தான் மாங்கல்யத்தை அணிந்திருந்ததாகவும், அது இணைக்கப்பட்டிருந்த சங்கிலியை மட்டுமே கழற்றி வைத்திருந்ததாகவும் அவரது தரப்பில் கூறப்பட்டாலும், அது குறிப்பிடத்தக்க விஷயமாக அமைந்திருந்தது.

இந்த வழக்கில், மனைவியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்து திருமணச் சட்டம் 7வது பிரிவின்படி, திருமணத்தில் தாலிக் கட்டுவது என்பது கட்டாயமல்ல என்றும், அதனை மனைவியே கழற்றினாலும், அவர் கழற்றியது உண்மையாக இருந்தாலும், தம்பதிகளுக்கு இடையேயான உறவில் எந்த தாக்கத்தையும்  ஏற்படுத்தாது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆனால், திருமண சடங்கில், தாலி கட்டுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுதான் பொதுவாகக் கருதப்படுகிறது. கிடைத்திருக்கும் முக்கிய ஆவணங்கள் மூலம், அப்பெண் சொந்த விருப்பத்தின் பேரில் மாங்கல்யத்தை கழற்றி, அதனை வங்கி வைப்பகத்தில் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஹிந்து முறைப்படி, ஒரு மனைவியானவர் எக்காரணம் கொண்டும் தனது கணவர் உயிருடன் இருக்கும்வரை, மாங்கல்யத்தை கழற்ற மாட்டார் என்பது நம்பிக்கை. கணவன் - மனைவிக்கு இடையேயான உறவு நிலைத்திருப்பதற்கான சடங்கே மாங்கல்யம் என்பது, பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கும் ஒரு புனிதமானது. அது தனது திருமண வாழ்க்கை நீடிக்க வேண்டும் என்பதை வேண்டி விரும்பியே ஒரு பெண் அணிகிறார் தனது கணவர் இருக்கும்வரை. எனவே, இந்த வழக்கில் மனைவி தனது மாங்கல்யத்தை கழற்றியிருப்பது, கணவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துவதற்கான உச்சபட்ச செயலாகவே பார்க்கப்படுகிறது. இது கடுமையான மனவேதனையை ஏற்படுத்தியிருக்கலாம் மற்றும் மனுதாரரின் நம்பிக்கை சீர்குலைப்பதாகவும் அமைந்திருக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாங்கல்யத்தை கழற்றுவது என்பது நமது நடைமுறைப்படி ஒரு சம்பிரதாய வழக்கமாக உள்ளது.

தாலிச் சங்கிலியை கழற்றியதுமே, திருமண உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக ஆகும் என்று கூறவில்லை. ஆனால், பிரதிவாதியான மனைவி, அவ்வாறு செய்திருப்பதன் மூலம், அவரது நோக்கம் குறித்து தெளிவான அனுமானத்துக்கு வரமுடிகிறது.

இந்த தம்பதி பிரிந்திருந்த போது, மனைவி மாங்கல்யத்தை கழற்றி வைத்திருந்ததற்கு பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதிவாதி மீண்டும் இணைவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை, தனது திருமண பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது என்றும் நீதிபதிகள் அமர்வு கூறியிருக்கிறது.

இது மட்டுமல்லாமல், அந்த மனைவி, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக கணவருடன் பணியாற்றும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் காவல்நிலையத்திலும் புகார் கூறியிருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில், கணவரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக, அவரை அவமானப்படுத்தும் வகையில் பலரது முன்னிலையில் அவர் மீது வீண் பழி சுமத்தி மன உளைச்சலுக்கு ஆளானவரிடமிருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளிப்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மனுதாரரும் அவரது மனைவியும் 2011ஆம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்கிறார்கள் என்பது புரிகிறது. இந்த காலக்கட்டத்தில், மீண்டும் ஒன்றாக இணைந்து வாழ மனைவி மற்றும் அவரது தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகிறது.

உண்மைநிலை மற்றும் சூழ்நிலைகளை அடிப்படை காரணிகளாக வைத்துக் கொண்டு, கணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மனைவி செய்த செயலையும் கருத்தில் கொண்டு, 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் நடந்த திருமண பந்தத்துக்கு இங்கே முற்றுப்புள்ளி வைத்து உத்தரவிடுகிறோம் என்றும், இது தொடர்பாக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, மனுதாருக்கு விவாகரத்து வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com