ஸ்ருதி ஹாசனுடைய பிசிஓஎஸ் பிரச்சினை என்ன தெரியுமா? அவஸ்தையும் அறிகுறிகளும்

திரைப்பட நடிகை ஸ்ருதி ஹாசன் அண்மையில் தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலப் பாதிப்பு குறித்து வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
பிசிஓஎஸ், பிசிஓடியா? கவலை வேண்டாம்...
பிசிஓஎஸ், பிசிஓடியா? கவலை வேண்டாம்...


திரைப்பட நடிகை ஸ்ருதி ஹாசன் அண்மையில் தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நலப் பாதிப்பு குறித்து வெளிப்படையாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் புரளிகள் வந்தன. அதற்கும் அவர் விளக்கம் அளித்திருந்தார். தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன், மிக மோசமான நாளமில்லா சுரப்பிகள் பாதிப்பினால்  அவதியுற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். 

ஒரு நடிகை தனது அழகைப் பேண வேண்டிய துறையில் இருப்பவர். அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல் நலப் பாதிப்பு குறித்து வெளிப்படையாக வெளியிடுகிறார். அவருக்கு ஏற்பட்டிருப்பது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை. 

ஒரு விஷயத்தைப் பற்றி எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட, குறிப்பாக பெண்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினைகள் என்றால் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது என்பது குறைவான விகிதமே. 

சினைப்பை நீர்க்கட்டி நோய் யாருக்கு வரும்?

உலகளவில் பத்து பெண்களில் ஒருவருக்கும், இந்திய அளவில் 10 பெண்களில் 2 அல்லது 3 பேருக்கும் இந்த பிரச்சினை இருக்குமாம். மாறியிருக்கும் வாழ்முறையால் பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சினையிலிருந்து வெளியேற சரிவிகித உணவு, உடற்பயிற்சி போன்றவை உதவும் என்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கான அறிகுறிகள் பெண்களை அதிகம்  பாதிப்புக்குள்ளாக்குபவை.

பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் என்ற சினைப்பை பிரச்சினை தொடர்பான  வார்த்தைகளை, மாதவிலக்கு கோளாறுடன் செல்லும் பெண்களுக்கு மருத்துவர்கள் கூறும் நோய்களில் ஒன்றாக இருக்கக் கூடும். சினைப்பை  நீர்க்கட்டி (பிசிஓஎஸ்)  மற்றும் சினைப்பை சூலக பிரச்சினை (பிசிஓடி) இரண்டும் சுரப்பிகளின் குறைபாட்டால் ஏற்படுவது என்றாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வேறுபாடுகள் உள்ளன.

பிசிஓடி என்ற சினைப்பை சூலக பிரச்சினை என்பது, சினைப்பையில் கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகத்தில் ஏற்படும் பாதிப்பைக் குறிக்கும். கருமுட்டை உருவாவதில் தாமதம் போன்றவற்றை ஏற்படுத்தும். குறைந்த தீவிரத்தன்மை கொண்ட பிரச்சினையாகக் கருதப்படுகிறது. 

பிசிஓஎஸ் என்பது சினைப்பை நாளமில்லா சுரப்பியின் வளர்ச்சிதைக் குறைபாடு, மாதவிலக்கு ஏற்படுவதில் கோளாறு, உடற்பருமன், இன்சுலின் உற்பத்தி மற்றும் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயம் அதிகம். 

பொதுவாக, பிசிஓஎஸ் அல்லது பிசிஓடி பிரச்சினை சுரப்பிகளில் கோளாறு ஏற்பட்டு, கருமுட்டை உருவாவதில் பாதிப்பை ஏற்படுத்துவது. இதனால், ஒவ்வொரு மாதமும் சூலகத்திலிருந்து கருமுட்டை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு, மாதவிடாய் தாமதமாகும். இதனால், பெண்களுக்கு சுரப்பிகளில் மாற்றம் ஏற்பட்டு ஆண்தன்மைக்கான சுரப்பி கூடுதலாகச் சுரந்து உடலில் அதிக முடி வளர்ச்சி உள்ளிட்டவை ஏற்படுகிறது.

கருப்பையின் அகப்படலம் மாறுபட்ட இடத்தில் காணப்படும், குறிப்பாக கருப்பையின் வெளிப்புறத்தில் இருக்கும். இதனால், அடிவயிற்று வலி, வலி மிகுந்த மாதவிடாய் நாள்கள் ஏற்படுகின்றன.

மாறுபட்ட கருப்பையின் அகப்படல திசுவானது கருப்பையின் மேல் அல்லது கருப்பையை ஒட்டிய இடங்களில் காணப்படும். மாதவிடாய் காலங்களில் ரத்தம் இங்கே சேகரிக்கப்பட்டு, அதன் காரணமாக வயிறு வீக்கம் அல்லது கடுமையான வயிற்றுவலி ஏற்படும்.

இதற்கு முதல் அறிகுறி தாங்க முடியாத வயிற்றுவலிதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வழக்கமாக, மாதவிடாய் காலங்களில் அடிவயிற்றில் லேசான வலி இருக்கும். ஆனால், கடும் வயிற்றுவலி என்றால் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது நலம்.  அதாவது கடும் வயிற்று வலியால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல், வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தால், நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். இது மாதவிடாய் கால வழக்கமான வயிற்றுவலி என்று மட்டும் விட்டுவிடக் கூடாது.

பிசிஓஎஸ் நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், ஆண் சுரப்பியான ஆன்ட்ரோஜன் அதிகம் சுரந்து, மகப்பேறின்மை நேரிடக் காரணமாகலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பெண்களின் வாழ்முறை மாற்றம் மற்றும் உணவு முறை போன்றவையும் இந்த பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவதாகவும், மோசமான உணவுப் பழக்க வழக்கமும் இந்த பிரச்சினையும் இணைந்து உடற்பருமனை அதிகரித்து, நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.

என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?

பிசிஓஎஸ் மற்றும் பிசிஓடி பிரச்சினைகளுக்கான சிகிச்சை முறைகள் பல உள்ளன. இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணிகள் முழுமையாகக் கண்டறியப்படுவதில்லை. ஆனால், இந்த நோய் பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் சிகிச்சையாக உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாட்டு முறை, கட்டாய உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சுரப்பிகளின் கோளாறை சரி செய்வதற்கான மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி பொதுவாக சொல்லிவிட்டால் போதுமா?

உடற்பயிற்சி என்றால் அரை முதல் முக்கால் மணி நேரத்துக்கு கடும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு என்றால் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவது, ஒட்டுமொத்தமாக உணவு முறையையே மாற்றிவிடாமல், பொருந்தா (ஜங்க்) உணவுகளை மட்டும் தவிர்ப்பது, நேரத்துக்கு சாப்பிடுவது போன்றவையும் உதவும் என்கிறார்கள்.

எனவே, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, தாமதமாகும்  மாதவிடாய், உடல் பருமன் போன்றவை பல பெண்களுக்கு இருக்கும் என்றாலும் இது ஒரு பிரச்சினை அறிகுறிகள் என்பதை உணர்ந்து, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நலம்.

தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினையைத் துணிந்து பொதுவெளியில் வெளிப்படுத்தியதன் மூலம் பிசிஓஎஸ், பிசிஓடி பற்றி எல்லாரையும் வெளிப்படையாகப் பேச  வைத்ததுடன், தீர்வுகள் மற்றும் சிகிச்சை பற்றியெல்லாம் விவாதிக்க வைத்த நல்லதொரு பணியைச் செய்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com