சினைப்பையில் நீர்க்கட்டி: எதனால் உண்டாகிறது? தீர்வு என்ன?

பொதுவாகவே பெண்களுக்கு எத்தனை வயது ஆனாலும் தான் அழகாக இருக்க வேண்டும், பிறர் குறை சொல்லாத வண்ணம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இயற்கையிலேயே உண்டாகியிருக்கும் .அதில் சிறிது
சினைப்பையில் நீர்க்கட்டி: எதனால் உண்டாகிறது? தீர்வு என்ன?

பொதுவாகவே பெண்களுக்கு எத்தனை வயது ஆனாலும் தான் அழகாக இருக்க வேண்டும், பிறர் குறை சொல்லாத வண்ணம் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இயற்கையிலேயே உண்டாகியிருக்கும் .அதில் சிறிது மாறுதல் இருந்தாலும் அவர்களால் அதை ஜீரணிக்க முடியாது .ஆனால் இந்தக் காலத்தில் சில பதின் பருவ பெண்களுக்கு, அதற்கு மாறுதலாக முகத்தில் லேசாக முடி வளருதல், கூடுதலான எடை, உடல் பருமன் முறையற்ற மாதவிடாய் போன்றவைகளும், மணமான பெண்களுக்கு குழந்தை பிறக்க நாளாகுதல், அவர்களுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவைகள் உண்டாகின்றன.

இதனால் அம்மாதிரி பெண்களுக்கு நாம் சராசரி பெண்களைப்போல் இல்லையோ, நமக்கு பெண்மைத் தனம் குறைந்து இருக்கிறதோ என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மை கூட உண்டாகிறது. இது எதனால் ஏற்படுகிறது இதை சரிசெய்ய முடியுமா? இதைப்பற்றி, டாக்டர் கெளரி மீனா ( மகப்பேறு, மகளிர் நலம் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை) என்ன கூறுகிறார் பார்ப்போம்:

பாரம்பரியமாக நாம் பார்த்தால் ஒரு மனிதனின் சுமுக வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் காலை சூரியன் உதிக்கும் பொழுது எழுந்திருக்க வேண்டும் இரவு நிலா தோன்றும் சமயம் படுக்கைக்குச் செல்ல ஆயத்தம் செய்ய வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இது தலைகீழாக மாறி இருக்கிறது. அதனால், " சர்கேடியன் ரிதம்" என்கிற ஹார்மோனின் செயல்பாடு மாறிவிடுகிறது. இதனால் பல மாற்றங்கள், கோளாறுகள் உடலில் உண்டாகின்றன. அதில் ஒன்றுதான் பி சி ஓ எஸ் என்று கூறப்படுகின்ற பெண்களுக்கு உண்டாகும் கோளாறு.

பி.சி.ஓ.எஸ். என்றால் என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரம் என்று கூறப்படும் இந்தக் கோளாறு, உலக அளவில், பத்துக்கு ஒரு பெண்ணுக்கும், இந்திய அளவில் பத்துக்கு இரண்டு அல்லது மூன்று பெண்களுக்கும் உண்டாகிறது. இது என்னவென்றால், கர்ப்பப்பையை ஒட்டியுள்ள சினைப்பை அல்லது முட்டைப் பையில், வெளியேறாத முட்டைகளைச் சுற்றியுள்ள நீரில் உண்டாகும் சிறுசிறு நீர்க்கட்டிகள் ஆகும். பொதுவாக கட்டி என்றால் எல்லோருக்கும் புற்றுநோய் என்கிற பயம் தான் முதலில் வரும். ஆனால் இது அந்த மாதிரியான கட்டி இல்லை.

இது எதனால் ஏற்படுகிறது ?

முக்கியமாக வாழ்க்கை முறை மாறுவதால் இந்தக் கோளாறு உண்டாகிறது. உடலில், சர்க்கரை , கொலஸ்ட்ரால், இன்சுலின் இவைகளின் மாற்றங்களினால் உண்டாகின்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகும். மரபணு, மூலக்கூறு சம்பந்தப்பட்டது என்று கூறப்பட்டாலும் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் தான் இந்தப் பிரச்னை பெண்களுக்கு உண்டாகிறது என்பதை விஞ்ஞான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நீர்க்கட்டிகளினால் பெண்களுக்கு எந்த மாதிரியான சிரமங்கள் உண்டாகின்றன?

சரியான நேரத்தில் மாதவிடாய் வராமல் தள்ளிப்போகும். அதற்குண்டான மாத்திரைகளை உட்கொண்டால் தான் மாதவிலக்கு வரும் என்ற நிலைமை இருக்கும். நாட்களை கணக்கு வைத்துக்கொள்ள முடியாமல் குறிப்பிட்ட காலம் அல்லாமல் முன்போ பின்போ மாதவிடாய் வரும். நிற்காமல் இருக்கின்ற உதிரப்போக்கு. இந்த மாதிரியான பிரச்னைகள் உண்டாகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால் சினைப்பையில் இருக்கும் முட்டைகள் வெளியேறாமல் அங்கேயே தங்கி விடுவது தான்.

இந்த பிரச்னை எதனால் உண்டாகிறது?

கர்ப்பப்பை சினைப்பை நடுவிலுள்ள ஹார்மோன்கள்தான் சமிக்ஞைகளைக் கொடுக்கின்றன. கருமுட்டைகள் வெளியேறினால்தான் எப்பொழுது மாதவிடாய் வர வேண்டும் என்ற தகவலை, ஹார்மோன் கொடுக்கும். அப்படி இல்லாவிடில், அந்தத் தகவலை ஹார்மோனால் சரிவர கொடுக்க முடியாமல் போகிறது.

அதனால் மாதவிடாய் கோளாறுகள் உண்டாகின்றன. ஒரு விந்தணுவும், ஒரு கருமுட்டையும் சேர்ந்தால்தான் ஒரு கரு உண்டாகிறது. அந்தக் கருமுட்டைகள் வெளியேற்றப்படாமல் தங்கிவிடுவதால் கரு உருவாக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்தக் குறையைப் போக்க இப்பொழுது மருந்துகள் உள்ளன.

வேறு எந்த மாதிரி பிரச்னைகள் இதில் ஏற்படுகின்றன?

இந்த கோளாறு உள்ள பெண்களுக்கு சர்க்கரைவியாதி, கொலாஸ்டிரல், ரத்தக் கொதிப்பு, கர்ப்பக் காலத்தில் பிரச்னைகள், இருதயக் கோளாறுகள் போன்றவையும் வரலாம்.

இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போனால், எண்டோமெட்ரியம் என்று கூறப்படும் கர்ப்பப்பையின் உட்புற சுவர் தடித்து புற்றுநோய்க்கு முந்தைய நிலைமை என்று கூறப்படும் அளவிற்கு கொண்டு விட்டுவிடும். வெகு சிலருக்கு புற்று நோய் பாதிப்பும் உண்டாவதை நாங்கள் பார்க்கிறோம். அதனால் குறைந்தது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது மாதவிடாய் வருகிறதா என்பதை பெண்கள் உறுதி செய்து கொள்வது நல்லது.

மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய இயலுமா?

சரியான நேரத்தில் சரியான சாப்பாடு, சரியான காலத்தில் உறக்கம், உடற்பயிற்சி , உடல் எடை ஏறாமல் பாதுகாத்துக் கொள்ளுதல், மனதை லேசாக வைத்துக் கொள்ளுதல் போன்றவைகளால் ஓரளவு மாதவிடாய் சுழற்சியை தக்கவைத்துக் கொள்ளலாம். இவை எல்லாம் செய்தும் சிலருக்கு பலன் கொடுக்காது .அப்படி இருப்பவர்களுக்கு ,அந்தந்த நேரத்திற்கு தகுந்த ஹார்மோன் சிகிச்சைகளைச் செய்து கொள்ள வேண்டும். முதலில் முகம் போன்ற தேவையில்லாத பாகங்களில் முடி வளருதல், தலைமுடி கொட்டுதல், முகத்தில் அதிகமாக பருக்கள் போன்றவை உண்டாவது உண்டு. ஆனால் அதற்குத் தகுந்த சிகிச்சைகளை அந்தந்த காலத்தில் எடுத்துக்கொள்ளுதல் நலம். யாருக்கு எந்த வகையான பிரச்னைகள் உண்டாகும் என்று கூறமுடியாது. பொதுவாக வாழ்வியல் மாற்றங்கள் உண்டாவதால் இந்த மாதிரி பிரச்னைகள் பெண்களுக்கு உண்டாகின்றன என்பது பொதுவான கருத்து.

கர்ப்ப காலத்தில் இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்னைகள் பெண்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

கர்ப்ப காலத்தில் கர்ப்ப சர்க்கரை அதிக அளவில் காணப்படும். பொதுவாகவே முப்பது வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட வேண்டாம் என்பது பொதுவாக எல்லோருக்கும் கூறப்படும் ஒரு கருத்து. ஆனால் இந்தப் பிரச்னை உள்ள பெண்களிடம் மருத்துவரான நாங்கள் சிறிது அழுத்தம் கொடுத்தே, முப்பது வயதிற்கு மேல் தள்ளிப் போட வேண்டாம் என்பதை கூறி வருகிறோம். ஏனென்றால் , முப்பது வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் கருவில் உண்டாகும் சிசுவிற்கு ,இயற்கையிலேயே, மரபணுவில், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இவைகள் உண்டாவதோடு, பிறக்கும் குழந்தையும் அதிக பருமனோடு பிறக்கும்படி நேரும். பெண் சிசுவாக இருக்கும் பட்சத்தில் இந்த பிசிஓஎஸ் பிரச்னை அந்த குழந்தைக்கும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. சாதாரணமாக நாற்பது வயதிற்கு மேல் ஒருவருக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி போன்றவைகள் வரும் என்றால் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு சீக்கிரமாகவே இந்த தொல்லைகள் உண்டாகும்.

பெண்ணிற்குள் ஆணுக்கு உண்டான ஹார்மோன்கள் இருக்குமா?

எப்படி ஒரு ஆணுக்குள், பெண்ணுக்கு உண்டான ஹார்மோன் இருக்கிறதோ, அதுபோல் ஒரு பெண்ணிற்குள்ளும், ஆணுக்கு உண்டான ஹார்மோன் இருக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு ஆணுக்கு உண்டன ஹார்மோன் விகிதாச்சாரம் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு அட்ரீனல் என்னும் சுரப்பி
அதிகமாக சுரக்கும். அந்த மாதிரி சமயத்தில் சாதாரணமாக ரத்தப் பரிசோதனை செய்வதை தவிர இதற்கு உண்டான அதிகப்படியான ஹார்மோன் சம்பந்தப்பட்ட ரத்தப் பரிசோதனையும் செய்து, தகுந்த சிகிச்சையையும் நாங்கள் அளிக்கிறோம்.

பெண்கள் எதனால் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்?

எடை குறைப்பது என்பது பெண்களுக்கு ஒரு சவாலாகவே ஆகிவிடுகிறது .அதுமட்டுமல்லாமல் பிறர் கேலிக்கு ஆளாகி விடுகிறோம் என்கிற எண்ணம் அவர்களுக்கு அதிகமாகவே உண்டாகிறது. மணமான பெண்களுக்கு குறித்த காலத்தில் கர்ப்பம் தரிக்காமல் இருத்தல், ஒழுங்கற்ற மாத விலக்கினால் வேலைபார்க்கும் இடங்களில் பெண்களுக்கு உண்டாகும் அசெளகரியம் போன்றவைகளால் பெண்கள் பலர் மனதளவில் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம். முகத்தில் முடி வளருதல், தலைமுடி கொட்டுதல், முகப்பருக்கள் இவைகளெல்லாம் ஒரு பெண்ணுக்கு அவளுடைய அழகை குறைத்து விடுகிறது என்பதில் மிகவும் வருத்தம் உண்டாகிறது.

இதற்கு என்ன தீர்வு?

இது ஒரு மருத்துவர் மட்டுமே பார்த்து சரி செய்யக்கூடிய கோளாறு அல்ல. பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்கள் முதலில் ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, அடிப்படையான மாதவிடாய் சுழற்சியை சரி செய்து கொள்ள வேண்டும். பிறகு சருமத்திற்கு உண்டான மருத்துவரை அணுகி, பருக்கள், தலைமுடி கொட்டுதல் போன்ற சரும பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். முக்கியமாக ஒரு தம்பதிக்கு பிசிஓஎஸ் பிரச்னை இருக்கும் மனைவியாக இருந்தால், முப்பது வயதிற்கு மேல் குழந்தை பிறப்பதை தள்ளிப்போடக்கூடாது என்கிற கருத்தை இருவருமே மனதில் கொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்னையை, ஒரு வியாதி என எண்ணி, ஒதுக்காமல், தானும் ஒதுங்கி விடாமல், இது வாழ்க்கையில் நம்முடன் இருக்கப் போகும் ஒரு சுபாவம் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். இதை எப்படி சமாளிப்பது என்கிற எண்ணத்தை மேன்படுத்திக் கொண்டு, செயல்பட்டால், வாழ்க்கை சுமுகமாக இருக்கும். ஆகையால் பிசிஓஎஸ் இருக்கிறவர்கள், உடல் எடையை அதிகரிக்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனதில் அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உடற்பயிற்சியை விடாமல் செய்யுங்கள். அந்தந்தப் பிரச்னைகளுக்கு உண்டான மருத்துவரை அணுகி, அவ்வப்பொழுது சிகிச்சை மேற்கொள்ளுங்கள். வளமுடன் வாழுங்கள்".

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com