
சிறு வயது மருத்துவ கனவை நனவாக்கும் வகையிலும், மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் விதமாக 68 வயதில் நீட் தேர்வு எழுதும் முதியவர்.
இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கும்பகோணம் பட்டுக்கோட்டையில் 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்து 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்.
இதேபோல் தஞ்சை வல்லம் அருகே உள்ள பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் 68 வயதுடைய ராமலிங்கம் என்பவர் நீட் தேர்வு எழுதி உள்ளார். திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட அவர் படிப்பதற்காகவே தஞ்சை சிந்தாமணி பகுதியில் தற்போது வசித்து வருகிறார். சிறு வயது முதல் மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை தனது 68 வயதில் இன்று அவர் நீட் தேர்வு எழுதுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில் இதுவரை கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் இதுவரை தனது வாழ்நாளில் 28 பட்டங்களை பெற்றுள்ளதாகவும் ஆனால் சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் தனது 68 வயதில் தற்போது நீட் தேர்வு எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வுக்காக தான் எந்த பயிற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் நிச்சயமாக வெற்றி பெற்று மருத்துவராகி விடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் தற்போது நீட் தேர்வால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்வது என்பது வேதனையான ஒன்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தான் இந்த நீட் தேர்வை எழுதுவதாகவும் அவர் தெரிவித்தார்.