
பிளஸ் 2 மாணவி மரணம்: பேருந்துகளுக்கு தீ வைப்பு; 20 காவலர்கள் படுகாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 5 நாள்களாக தொடர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், இன்று போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை சூறையாடினர். காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடித்தது.
படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி பலி: சிபிசிஐடி விசாரிக்குமா?
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரியநெசலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்து, அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்த நிலையில், அந்த மாணவி கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து பெற்றோா், அவரது உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 5 நாள்களாக மாணவி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதோடு, மாணவியின் உடலையும் வாங்க மறுத்து வருகின்றனா்.
படிக்க | 'காவலர்களைத் தாக்கியதற்கு கண்டனம்: போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்'
இந்நிலையில், இன்று ஆறாவது நாளாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிக அளவிலான பொதுமக்கள் கூடியதால், போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் பள்ளியின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் டிஐஜி பாண்டியன் உள்பட 20 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
படிக்க | மாணவி மரணம்: 'குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்'
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நுழைந்து கற்களை வீசித் தாக்கி சூறையாடினர்.
போராட்டக்களத்தில் பலர் கூடி வருவதால், கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.