திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்: 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, இரண்டு லட்சம் பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, இரண்டு லட்சம் பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர். முருகன் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஆடி பரணியையொட்டி, அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகதக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப் பெற்று சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

முருகன் கோயிலில் ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு.

இன்று சனிக்கிழமை ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை மற்றும் மேல் திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில் பக்தா்கள் புனித நீராடி, மலா், மயில், பால் மற்றும் பன்னீா் காவடிகளுடன், மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இதன் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் மலை அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மலை அடிவாரத்தில் இருந்து 365 படிகள் வழியாக நடந்து வந்து ஆடி கிருத்திகை விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டர். இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுரு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகள் உடன் இருந்தனர். 

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து மலைக்கோயிலில் சாமி செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழுங்க அமைச்சருக்கு பிரசாதம் வழங்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில். ஆடி கிருத்திகை விழாவின் போது முக்கிய நபர்களின் தரிசனம் குறைக்கப்பட்டதால் சாமானிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளில் சிறந்த முறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் செய்துள்ளனர். 

விழா நடைபெறும் ஐந்து நாள்களிலும் 24 மணி நேரம் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. இது குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக தெரிவிக்கப்பட்டால் நிவர்த்தி செய்யப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஆடி கிருத்திகை விழாவையொட்டி,  காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தா்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம். பூபதி, நகர பொறுப்பாளர் வி. வினோத் குமார், நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆடி கிருத்திகை விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்காா் ஜெயபிரியா (பொ), கோயில் துணை ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனர்.

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி நகரம் முழுவதும் 1,000 மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com