

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது, தொடர்ந்து வாசிக்கும் போது நினைவாற்றல் பெருகும் என்பதால் மாணவர்கள் புத்தக வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சின்னதுரை, நகர்மன்றத் தலைவி செ. திலகவதி, புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, நா. முத்துநிலவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவில் ஒடிசா மாநில முதல்வரின் ஆலோசகரும் எழுத்தாளருமான ஆர். பாலகிருஷ்ணன், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் பேசுகின்றனர்.
இதையும் படிக்க | கம்பத்தில் முதியோர் இல்லம் தொடக்கம்
வரும் ஆக. 7ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.
மாநிலம் முழுவதும் இருந்து 67 பதிப்பகங்களின் 80 அரங்குகளும், அரசுத் துறைகளின் அரங்குகளும் என மொத்தம் 100 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
தினமும் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
ரூ. 2 கோடிக்கு புத்தக விற்பனை நடைபெறலாம் என விழாக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.