
எடப்பாடி: எடப்பாடி பேருந்து நிலையம் அருகே இன்று (ஞாயிறு) அதிகாலை மரக்கடை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான மர சாமான்கள் எரிந்து சாம்பலானது.
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி, வளர்மதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், மகன் சேகர், (34). இவர் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மர சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சேகர் வழக்கம்போல் நேற்று மாலை பணிகள் முடிந்து, கடையை பூட்டி விட்டு சென்று நிலையில், ஞாயிற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சேகரின் மரக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால் உடனடியாக தகவல் தெரியாத நிலையில், தீ கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
இதில் கடையில் விற்பனைக்குத் தயாராக வைத்திருந்த மர சாமான்கள் மற்றும் விலை உயர்ந்த மரப்பலகைகள் என பல லட்சம் மதிப்புள்ளான மரங்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
தீயின் வேகம் அதிகரித்த நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடையில் உள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து எடப்பாடி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.