
சென்னையில் மலர்க் கண்காட்சியை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
சென்னையில் முதல்முறையாக மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்த கண்காட்சியினை இன்று தொடக்கிவைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர்க் கண்காட்சியினை இன்று முதல் மூன்று நாள்களுக்கு (ஜூன் 3- 5) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்க்கலாம்.
ஊட்டி, கொடைக்கானல், மைசூரு போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்களால் அமைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியில் மலர்களால் உருவாக்கப்பட்ட பறவை, விலங்குகள், காய்கறிகளால் அமைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் சுயபடம் எடுப்பதற்கானஇடங்கள் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.50, மாணவர்களுக்கு ரூ.20 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல்முறையாக சென்னையில் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று மலர்க் கண்காட்சி நடத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கச்சத்தீவு: ஸ்டாலின் கேட்டதும் கருணாநிதி சொன்னதும்!