
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
நவகிரகங்களில் ராகு பரிகாரத் தலமாக விளங்கும் நாகநாதசாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது.
இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவள்ளி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.
இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அலங்கரிக்கப்பட்ட சிறப்பு மலர் அலங்காரத்தில் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் அருகே எழுந்தருள கொடிமரத்திற்கு திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏழாம் திருநாளாக திருக்கல்யாணமும், பத்தாம் திருநாளாக தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | மாடி வீட்டின் தடுப்பு கிரிலில் ஒன்றரை வயது குழந்தையின் தலை சிக்கியது!