திருக்குறளுக்கு இணையானதொரு நூல் இல்லை - நீதிபதி ஆர். மகாதேவன் பேச்சு

திருக்குறளுக்கு இணையானதொரு நூல் இல்லை என சென்னையில்  நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.
'வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' நூல் வெளியீட்டு விழாவில்...
'வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' நூல் வெளியீட்டு விழாவில்...

திருக்குறளுக்கு இணையானதொரு நூல் இல்லை என சென்னையில்  நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இரா. பூரணலிங்கம் எழுதிய 'வாழ்வில் வளம் பெற வள்ளுவம்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மத்திய மற்றும் தமிழக அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பதவி வகித்தவரான பூரணலிங்கத்தின் இந்த நூலை நீதிபதி ஆர். மகாதேவன் வெளியிட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான எம். ராஜாராம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நூலை வெளியிட்டுப் பேசிய நீதிபதி ஆர். மகாதேவன், எக்காலத்துக்குமான திருக்குறளின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார்.

மிக நீண்ட வரிகளில் சங்கப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள அறக்கருத்துகளைத் திருக்குறள் இரண்டே வரிகளில் விளக்கிச் சொல்கிறது என்பதற்கான சான்றாக சங்கப் பாடல்களையும் திருக்குறளையும் ஒப்பிட்டுப் பேசினார் மகாதேவன்.

திருக்குறள் உலகில் எவருக்கும் எதிரானதாக இருக்கவில்லை என்றும் எவரும் இதனை வாசித்துப் பயனுறலாம் என்றும் இதற்கு இணையாக உலகில் ஒரு நூல் இல்லை என்பதையும் அழுத்தமாகக் குறிப்பிட்டார். எளிய முறையில் எழுதப்பட்டுள்ள பூரணலிங்கத்தின் இந்த நூல் அனைவரும் படித்துப் பயன்பெறும் விதமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நூலைப் பெற்றுக்கொண்ட எம்.ராஜாராம் (ஐஏஎஸ் - ஓய்வு) திருக்குறள் குறித்து மேலைநாட்டினர் வியந்தோதும் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டியதோடு இந்த நூல், நூலாசிரியரின் வாழ்வனுபவத்தோடு திருக்குறளுக்கான விளக்க உரைகளை முன்வைக்கிறது என்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருடன் பணியாற்றிய அவரது அனுபவங்களை சில திருக்குறள் விளக்க உரைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் இரா. பூரணலிங்கம். தனக்கும் திருக்குறளுக்குமான தொடர்பு பள்ளிக் காலத்தில் மிகக் குறைந்த அளவே இருந்ததென்பதையும் கரோனா தொற்றுக் காலத்தில்தான் அதனைத் தான் முழுமையாகப் புரிந்து படித்து மிகவும் வியந்துபோனதாகவும் குறிப்பிட்டார். திருக்குறள் குறித்த பல்வேறு உரைகளைப் படித்துப் பார்த்த பின்னர் மிகவும் ஆர்வத்தோடு இந்த நூலைப் பல்வேறுபட்டவர்களுடன் ஆலோசித்து எழுதியதாகவும் தெரிவித்தார்.

இந்த நூல் அனைவரிடமும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன் முன்னிலை வகித்தார். நிறுவனத்தின் பொது மேலாளர் தி. ரெத்தினசபாபதி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் நிறைவாக டாக்டர் மு. ஆறுமுகம் நன்றி கூறினார்.

விழாவில் அரசுத் துறைச் செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமான முன்னாள், இன்னாள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com