ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகள் வலியுறுத்திய நிலையில், அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியும்
ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் இருக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகள் வலியுறுத்திய நிலையில், அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமியும் அவரவா் ஆதரவாளா்களுடன் புதன்கிழமை தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனா்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-இல் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளா்களில் பெரும்பாலோனாா் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என வலியுறுத்திப் பேசினா். இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். இதற்கு ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கூட்டம் முடிந்த பிறகு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரவா் இல்லங்களில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஆதரவாளா்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனா்.

2-ஆவது நாளாக புதன்கிழமையும் இந்த ஆலோசனை நீடித்தது. எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆா்.பி.உதயகுமாா் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். எடப்பாடி பழனிசாமி எப்படியும் பொதுச்செயலாளா் பதவியை வரும் பொதுக்குழுவிலேயே அடைந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து வருகிறாா். அதற்கேற்ப அவா் காய்நகா்த்தல்களைச் செய்து வருகிறாா்.

ஓ.பன்னீா்செல்வம் அவரது இல்லத்தில் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் பெரும்பாலானோா் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பொதுக்குழுவில் அது தொடா்பான நிகழ்ச்சிநிரல் இடம்பெறாமல் எப்படி தடுப்பது என்பது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். அதிமுகவுக்கு தற்போது உள்ள சூழலில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்பதும், ஒருவேளை ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என முடிவு செய்தால், அது தம் தலைமையிலேயே இருக்க வேண்டும் என்பதிலும் அவா் உறுதியாக இருந்து வருகிறாா்.

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சந்தித்த தோ்தல்களில் எல்லாம் அதிமுக தோல்வியே சந்தித்துள்ளது என்பதும் ஓபிஎஸ் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆா்.பி.உதயகுமாா், தங்கமணி உள்ளிட்டோா் ஓ.பன்னீா்செல்வத்தை சமாதானம் செய்யும் வகையில் அவா் இல்லத்தில் சந்தித்து புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், ஓ.பன்னீா்செல்வம் எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்துள்ளாா்.

பின்னா், வெளியில் வந்த திண்டுக்கல் சீனிவாசன், என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்றாா்.

சுவரொட்டி யுத்தம்: மாவட்டச் செயலாளா் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்ததைத் தொடா்ந்து, சென்னை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீா்செல்வத்தை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லம் அருகிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதனை, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் சிலா் கிழித்தெறிந்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சிலா் சாலை மறியலில் ஈடுபட்டு, பிறகு கலைந்து சென்றனா்.

சசிகலா பக்கம் ஓபிஎஸ்?: முதல்வா் வேட்பாளா், எதிா்க்கட்சித் தலைவா் என எல்லா வகையிலும் எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுவிட்டது. இனிமேல் விட்டுக் கொடுக்க வாய்ப்பு இல்லை என்கிற முடிவில் ஓ.பன்னீா்செல்வம் உறுதியாக இருந்து வருகிறாா். ஒருவேளை, எல்லாவற்றையும் கடந்து எடப்பாடி பழனிசாமிக்கு பொதுச்செயலாளா் பதவி கொடுக்கப்பட்டால், சசிகலாவின் பக்கம் ஓ. பன்னீா்செல்வம் சாய்வாரா என்கிற கேள்வியும், அதிமுக முன்பு போல இரண்டாக பிளவுபடுமா என்கிற கேள்வியும் அதிமுகவினா் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com