ஒற்றைத் தலைமை சர்ச்சை உருவானது எப்படி? ஓபிஎஸ் விளக்கம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை உருவானது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை உருவானது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

சர்ச்சை உருவானது பற்றி அவர் கூறியதாவது:

"பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் போய்க் கொண்டிருக்கிறது. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைமைப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைப்புச் செயலாளர்கள் ஆகியோர் என்னிடத்திலும், துணை ஒருங்கிணைப்பாளரிடமும் ஜெயலலிதா காலத்தில் சிறப்பு அழைப்பாளராக எங்களுக்கு அழைப்பு வரும் தற்போது ஏன் அது வரவில்லை என்ற கோரிக்கை வைத்தனர்.

இதை எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டுசென்று அவர்களை அழைக்க வேண்டும் என்று சொன்னபோது, இந்தத் தேர்தல் கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல், முறைப்படி பொதுக்குழுவில் வைத்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டும், எனவே சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு இல்லை என சொல்லப்பட்டது. இதை விளக்குவதற்காகப் போடப்பட்ட கூட்டம் அது.

மாவட்டச் செயலாளர்கள் மூலம் மற்ற பொறுப்பாளர்களிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்கான கூட்டம்தான் அது.

அந்தக் கூட்டம் நன்றியுரை கூறி முடிகிற நேரத்தில் சிலபேர் கருத்துகள் சொல்ல வேண்டும் என பழனிசாமி, முதன்முதலில் மூர்த்தியைப் பேச அழைத்தார். அவர்தான் முதலில் ஒற்றைத் தலைமை குறித்து ஆரம்பித்தார்.

இதுபற்றி என்னிடம் கலந்து பேசவில்லை. ஒருங்கிணைப்பாளராக என்னிடமும் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கலந்து பேசவில்லை. தலைமை உறுப்பினர்கள் இருக்குமிடத்தில் பேச வேண்டிய கருத்து இது. இதை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசியது மட்டுமின்றி, வெளியே சென்று யாரும் பேட்டியாகக் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தும் ஜெயக்குமார் இதை பேட்டியில் சொன்னது மிகப் பெரிய பூதாகரமாக வெளியே சென்று கொண்டிருக்கிறது. 

நன்றாக 6 ஆண்டு காலம் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கட்சியை வழிநடத்திச் சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை குறித்து சிலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே, இது தேவைதானா என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தொண்டர்கள் பல்வேறு நிலைகளில் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். எனவே, தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com