மொழி தடையல்ல
கோவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ர.ரிஷப் குமார் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அண்மையில் வெளியான பொதுத் தேர்வு முடிவில் 500-க்கு 461 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றார். அதிகமாக தமிழ் தெரியாத நிலையிலும் இவர் தமிழ்ப் பாடத்தில் 87 மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ரிஷப் குமார் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தீனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியிலும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியிலும் படித்துள்ளார்.
இவர்களது பெற்றோர் ரவிசங்கர் - சந்தாதேவி.
மாணவர் ரிஷப் குமார் கூறுகையில், ஆரம்பத்தில் தமிழ் வழிக் கல்வி சிரமமாக இருந்தது. ஆசிரியர்கள் அக்கறை எடுத்து கற்றுத் தந்தது எனக்கு உறுதுணையாக இருந்தது என்றார்.
மாணவர் ரிஷப் குமாரை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலர் சி.அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
பார்வைத் திறன் குறைபாட்டை வென்ற மாணவர்
திருப்பூர், ஜூன் 21: திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ஆர்.குமார் - கே.விஜி தம்பதி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது இளைய மகன் கே.கோகுல். கோவையில் உள்ள தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற கோகுல், 75 சதவீதம் பார்வைத் திறன் குன்றியவர்.

7-ஆம் வகுப்பு வரை இயல்பாக இருந்த இவரது பார்வைத் திறன் அதன் பிறகு குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டது. வெள்ளைத்தாளில் கருப்பு மையால் மிகப்பெரிய எழுத்துகளால் எழுதி கண்ணுக்கு அருகில் வைத்தே இவரால் படிக்க முடியும்.
மிகுந்த சிரமத்துக்கு இடையே படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த கோகுல், 12-ஆம் வகுப்பில் 600-க்கு 578 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார். சோதனைகளுக்கு இடையே சாதனை படைத்துள்ள மாணவர் கோகுலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மலைக் கிராமப் பள்ளியில் மலையளவு வெற்றி
திண்டுக்கல், ஜூன் 21: மலைக் கிராமமான மன்னவனூர் அரசுப் பள்ளியில் முதல் முறையாக வணிகவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்று மாணவி சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூரைச் சேர்ந்தவர் என்.வைஷ்ணவி. மன்னவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான இவர், கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினார். திங்கள்கிழமை முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இதன்மூலம் கடந்த 2012-13ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில், முழு மதிப்பெண் பெற்ற முதல் மாணவி வைஷ்ணவி என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை பாண்டியம்மாள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
மாணவியின் தன்னம்பிக்"கை'
மயிலாடுதுறை, ஜூன் 21: பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்ததால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, காப்பகத்தில் விடப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த லட்சுமி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவியை, மயிலாடுதுறையில் உள்ள "அன்பகம், அறிவகம்' மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலன் குன்றியோருக்கான காப்பகத்தில் தங்கள் குழந்தையாகவே பாவித்து வளர்த்து வருகின்றனர் காப்பத்தின் செயலர்களான கலாவதி - ஞானசம்பந்தம் தம்பதி.
கைகள் இரண்டும் இல்லாத நிலையிலும், தரையில் வைக்கப்படும் கரகத்தை கால்களால் தலையில் ஏந்தி ஆடுவது, காப்பகத்தில் உள்ள மாணவிகளின் கைகளில் தனது கால்களால் மெகந்தி வரைவது என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் லட்சுமி.
லட்சுமி ஆடிய கரகாட்டத்தை யூ டியூப் வாயிலாக பார்த்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் லட்சுமியின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் காப்பகத்துக்கு வந்து லட்சுமியை தங்களுடன் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார் லட்சுமி.
மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் (ஸ்கைரப்) எழுதி முடிவுக்காக காத்திருந்த லட்சுமி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
கைகள் இல்லாவிட்டால் என்ன? தன்னம்பிக் "கை" உள்ளது என சாதித்துக் காட்டியுள்ளார் லட்சுமி.
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி தேர்ச்சி
திண்டுக்கல்/மானாமதுரை/ வேலூர், ஜூன் 21: தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவி 454 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள சவேரியார்பட்டியைச் சேர்ந்தவர் ரட்சகர். இவர் கடந்த மே 18-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மகள் பிரின்ஸ் சோபியா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், கடந்த மே 19-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்வை தந்தை இறந்த துக்கத்துக்கு இடையிலும் எழுதினார். அதேபோல், ரட்சகர் இறந்த நாளில், வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவரது மகன் ராபின் 11-ஆம் வகுப்பு தேர்வை எழுதிவிட்டு வந்து இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிரின்ஸ் சோபியா 454 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
மானாமதுரை மாணவர்: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர் தனது தந்தை இறந்த நாளில் பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
மானாமதுரை ரயில்வே காலனியை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் முத்து. இவரது மகன் சந்தோஷ், இங்குள்ள ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த மே மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது.
இதற்கு, சந்தோஷ் தயாராகி வந்த நிலையில், அவரது தந்தை முத்து உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்தார். இருப்பினும்,
மயானத்தில் தனது தந்தைக்கு ஈமச் சடங்குகளை முடித்துவிட்டு, பள்ளிக்குச் சென்று தேர்வெழுதினார்.

திங்கள்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சந்தோஷ் 383 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
வேலூர் மாணவி: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நிகிலா. இவர் நிகழாண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 397 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆங்கில பாடத் தேர்வின்போது மாணவி நிகிலாவின் தந்தை திடீரென உயிரிழந்தார். எனினும், பொதுத் தேர்வு எழுதி ஆங்கில பாடத்தில் 91 மதிப்பெண்கள் பெற்றார்.
மாணவியின் இந்தச் செயலை அறிந்த மாவட்ட அதிமுக செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு, நிகிலாவை செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து ரூ.10,000 நிதியுதவி வழங்கி பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

