மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா? 

மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடங்கும் அபாயம் அதிமுகவில்  ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இரட்டை இலைச் சின்னம்
இரட்டை இலைச் சின்னம்

மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடங்கும் அபாயம் அதிமுகவில்  ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் போர்க்கொடியால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே பல்வேறு கட்ட சமரச பேச்சுவார்த்தைகளை அடுத்து   இரட்டை இலைச் சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு மீண்டும் வழங்கப்பட்டது. 

ஆட்சி அதிகாரத்தில் இருந்த வரை பெரிதாக தெரியாமல் இருந்து வந்த கட்சி தலைமைக்கான அதிகாரப் போர் பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் இருதரப்பினரிடையே தலைதூக்க ஆரம்பித்தது.

இதனிடேயை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டைத் தலைமையில் இயங்கி வரும் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எச்சரித்திருந்தது. 

இந்நிலையில், அதிமுகவில் ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக ஒருங்கிணைப்பாளா் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளா் இபிஎஸ் இடையே கருத்து மோதல் நடைபெற்று வந்தது. இதனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 

இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு வியாழக்கிழமை அதிகாலை விசாரித்தது. 

இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதேசமயம், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு முன்னதாகவே ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். போக்குவரத்து நெரிசல் காரணமாக கூட்டத்திற்கு தாமதமாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். இதையடுத்து பொதுக்குழு, செயற்குழு கூட்டம் 11.30 மணிக்குத் தொடங்கியது. 

அப்போது, அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருந்த 23 வரைவு தீர்மானங்களும் முன்மொழியப்பட்டது. ஆனால், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், பொதுக் குழுக் கூட்டத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இரட்டைத் தலைமையால் சரியான எதிர்க்கட்சியாக அதிமுகவால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. 

வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும். இரட்டை தலைமை தொண்டர்களிடையே சேர்வை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியே இந்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என கூறினார். 

23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டார்கள். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு எஞ்சிய தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்மகன் உசேன் அறிவித்தார். 

இதனைத்தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்டார் வைத்திலிங்கம். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியேறினதும் பொதுக்குழு கூட்டம் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரட்டைத் தலைமைக்கு முடிவு வரும் நேரம் வந்துவிட்டது. அது ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவாவது உறுதியாகி விட்டது. 

இரட்டை இலை முடக்கப்படுமா?  தற்போது இருக்கும் இரட்டைத் தலைமை பதவி காலம் முடிவதற்குள் மாற்றம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையத்தின் பிரச்னையை சந்திக்க நேரிடும். ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னமும் முடக்கப்படலாம். 

ஏற்கெனவே இரட்டை இலை வழக்கில், சில சட்டச் சிக்கல்களை தினகரன் தரப்பு கையில் எடுத்துவரும் நிலையில், இரட்டை இலை விவகாரத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பின் தற்போதைய செயல்பாடுகளால் மீண்டும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடங்குவதற்கே வாய்ப்புகள் அதிகம். 

இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு வேண்டும் அல்லது முடக்க வேண்டும் என்ற விஷயத்தை ஓபிஎஸ் தரப்பு கையில் எடுக்கும். இரட்டை இலைச் சின்னம் தங்கள் தரப்புக்கு வேண்டும் என இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடும். இதனால் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் நிலை ஏற்படும்.

இரட்டை இல்லாத அதிமுகவை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.

ஒற்றைத் தலைமை கோரிக்கையால் அதிமுகவில் ஜூலை 11 ஆம் தேதி வரை நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக்கொண்டுதான் இருக்கும். 

இரு தரப்பினரின் அதிகாரப் போரால் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய அதிமுக உள்கட்சி பூசலிலே அடுத்த நான்கு ஆண்டுகளை கடந்து விடும் என்பது நிதர்சனம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com