பாளையங்கோட்டை ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 
பாளையங்கோட்டை ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையிலிருந்து பெருகி வரும் ஜீவநதியான தாமிரபரணியின் கீழ் பகுதியில் அமைந்துள்ள பாளையங்கோட்டை மாநகரில் 'ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்' ஆகிய மூல சக்தியாக விளங்கி தசரா விழாவின் நாயகியாகிய பன்னெடுங்காலமாக 12 அன்னையுடன் மகிஷாசுர சூரசம்ஹாரம் செய்து உலகை காத்து ரட்சித்து வரும் ஸ்ரீ ஆயிரத்து அம்பாளுக்கு இன்று காலை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.  

இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி அதிகாலையில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை மஹா கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது. அன்று மாலையில் தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து முதல் கால யாகசாலை பூஜை  நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இரவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.  மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கு யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்றவை நடைபெற்றன.

கும்பாபிஷேக விழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. தொடர்ந்து மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம் நாடி சந்தானம் ஸ்பாிசாகுதி மகா பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் யாத்ரா தானம் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

காலையில் 6 மணிக்கு மேல் 7.15க்குள் மிதுன லக்னத்தில் விமானம் மற்றும் ஸ்ரீ ஆயிரத்தம்பாள் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனா். நண்பகலில் மகா அபிஷேகமும் அன்னதானமும் நடைபெறுகிறது.  இன்று மாலையில் அம்பாளுக்கு  சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.  இரவில் ஆயிரத்தம்மன்  தூத்துவாரி அம்மன்  உட்பட ஒன்பது கோயில்களில் உற்சவ மூர்த்திகள்  வீதி உலா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந் நிகழ்வினை கண்டு தரிசித்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com