அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை போன்றவை முக்கிய திருவிழாக்களாகும். இத்திருக்கோயிலில் சாதாரண நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், முக்கிய விழாக்காலங்களில் 4 இலட்சம் முதல் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் வருகைபுரிகின்றனர். இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நெறிப்படுத்தப்பட்ட பிரகாரம், ஒழுங்கமைக்கப்பட்ட நிழல் மண்டபம், வெளிப்படையான நுழைவாயில்கள், கட்டமைப்பில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என மலைக்கோயில், அடிவாரம், பழனி மலை மற்றும் இடும்பன் மலை, இடும்பன் குளம் மற்றும் சண்முகா நதி உள்ளிட்ட பகுதிகளில் 153 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.