கோவையில் எய்ம்ஸ், மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மா.சுப்பிரமணியன் கோரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் காவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவையில் எய்ம்ஸ், மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி: மா.சுப்பிரமணியன் கோரிக்கை

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் காவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தர வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா.

சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு செய்தனா். 

சுகாதார நிலையங்களுக்கு வருவோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், சுகாதாரத்துடன் இருப்பதற்கான ஆலோசனைகளையும் பணியாளா்கள் வழங்க வேண்டும். மத்திய அரசின் இ-சஞ்சீவினி சேவைத் திட்டத்தின் கீழ், அரசு துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று, தொடா் சிகிச்சை வேண்டுவோருக்கு காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கி, வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தத் திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாா் அவா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்து தானும் பேரணியில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரர் பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். 

பயிற்சியின் போது காலில் அடிபட்டு சிகிச்சை பெற்ற விளையாட்டு வீராங்கனை, பிளஸ் 2 மாணவி சிந்து, பாலாஜி ஆகியோரின் உடல்நலம் குறித்து மன்சுக் மாணடவியா விசாரித்தார்.

நிகழ்ச்சியின் போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும். 

தமிழ்நாட்டில் பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதியதாக மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தர வேண்டும்.

மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுற்குமுறை விதிமுறைகளை, முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதில் மாநிலங்களின் பங்கினை குறைக்கும் விதிகள் நீக்கப்பட வேண்டும் என்று 31.07.2021 அன்று கடிதம் அனுப்பியுள்ளோண். வரைவு விதிமுறைகளின் பிரவு 10.1 மற்றும் அதன் கீழ் உள்ள துணைப் பிரிவுகள் மருத்துவக் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வாக மாற்றுவது என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். 

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தற்போதைய கலந்தாய்வு முறையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது கூட்டாட்சி தத்துவத்தின் அணி வேரையை நசுக்குவதாகும். 

உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழிவகை செய்ய வேண்டும். 

பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கையை 7.50 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். 

50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், நமது கோரிக்கை களை மத்திய அமைச்சர் நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com