பாம்பு கடித்து இத்தனை பேர் சாவார்களா? மருந்தில்லா சிக்கல்!

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், தமிழகத்தில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் பெருமளவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 
பாம்பு கடித்து இத்தனை பேர் சாவார்களா? மருந்தில்லா சிக்கல்!

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், தமிழகத்தில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகள் பெருமளவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

நாகப் பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் ஆகிய நான்கு விஷப் பாம்புகளால் அதிக இறப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான் என்றும் குறிப்பாக விவசாயிகள், பழங்குடியினர், நகரப் பகுதிகளில் அடர்ந்த பகுதிகளுக்குச் செல்வோர் பாம்புக்கடிக்கு ஆளாகின்றனர். அதுபோல, இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் கிராமப்புற பெண்களும் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். 

தேசிய சுகாதார விவரக்குறிப்பு தரவின்படி, தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 78 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். நாட்டிலே மேற்குவங்கத்துக்கு(132 இறப்புகள்) அடுத்தபடியாக தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

கடந்த 2019ல் அசாமில் பாம்பு கடித்து இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.  ஆனால், 2020 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்திற்கான தரவுகள் இல்லை.  

பாம்புக்கடி இறப்புகளில் முதல் 5 மாநிலங்கள் 

மாநிலம்2017201820192020
மேற்குவங்கம்268203239132
தமிழகம்38507078
ஒடிசா 1479811775
உ.பி.128737654
ஆந்திரம்8511846750
அசாம்003590

பாம்புக்கடி இறப்புகளில் தமிழகம் 2 ஆம் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 1,598 பேர் பாம்புக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 

ஆனால் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் இருக்கும் சேலம்(2,456) மாவட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வேலூர்(34), திருவண்ணாமலை(32), செங்கல்பட்டு(28) மாவட்டங்கள் உள்ளன. 

தமிழகத்தில் பாம்புக்கடி இறப்புகள்

மாவட்டம்பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்புகளின் எண்ணிக்கை
கோவை1,59855
சேலம்2,45640
வேலூர்1,44734
திருவண்ணாமலை 2,53932
செங்கல்பட்டு1,64528
தஞ்சாவூர்3,35426
திருவாரூர்1,00626
விழுப்புரம்1,31923
மதுரை1,78321
திருச்சி1,07921

இதுவே தமிழகத்தில் கடந்த 2017ல் 37 பேர், 2018ல் 50 பேர், 2019ல் 70 பேர், 2020ல் 78 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இறப்புகள் அதிகம், ஏன்?

பாம்புகள், தங்களுக்கான உணவு கிடைக்காதபட்சத்தில் வேறு இடங்களுக்குச் செல்கின்றன. அதாவது, பாம்புகள் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவு உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு கிடைக்காத நிலையிலேயே அவை உணவு தேடித் செல்லும்போது மனிதர்கள் இடையே வரும்பட்சத்தில், மூர்க்கமடைந்து அவர்களைத் தாக்குகின்றன. 

மேலும், தற்போது விளைநிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவருவதும் அவை உணவு தேடி மனித வாழ்விடங்களுக்குச் செல்ல காரணம். 

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாம்பு மீட்கும் மையத்தை ஏற்படுத்தி இதனை கண்காணிக்க வேண்டும் என்று பாம்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், பாம்பு கடித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் கால தாமதம் காரணமாக உடலில் விஷம் பரவி இறந்துவிடுவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபோல ஊரகப் பகுதிகளில் மற்றும் மலைப்பகுதிகளில் பாம்பு கடித்தவர்கள் இயற்க்கை மருந்துகளை பயன்படுத்துவதாலும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. 

இதனிடையே, தமிழகத்தில் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் முழுமையானதாக இல்லை என்றும் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பாம்புக்கடி உயிரிழப்புகள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதுமட்டுமின்றி, மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் தவிர பிற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷமுறிவு மருந்துகள் இல்லை என்றும் பாம்பு விஷத்தை முழுவதும் முறிக்கக்கூடிய கூடுதல் சிகிச்சைக்கு அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனைகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. 

கூடுதல் தகவலாக, அண்டை மாநிலங்களில் பாம்பு கடித்து மருத்துவத்திற்காக தமிழகம் வருபவர்களாலும் இங்கு உயிரிழப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. 

கோவையில் ஏற்படும் உயிரிழப்புகளில் 3ல் ஒரு பகுதியினர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தரவு சொல்கிறது. 

ஆந்திரத்தில் கடந்த ஜனவரி - டிசம்பர் 2020ல் மொத்தமாக 26,617 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 

ஆனால், தமிழகத்தில் பாதிப்பை ஒப்பிடுகையில் உயிரிழப்பு அதிகம் இருக்கிறது. அதுபோல கடந்த ஆண்டும் இறப்புகள் விகிதம் அதிக வித்தியாசத்தில் உயர்ந்துள்ளது கவனிக்க வேண்டியது. உரிய மருந்துகள், சிகிச்சை முறைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும்பட்சத்திலும் மேலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலமாகவும் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கலாம். இதனை தமிழக அரசு கருத்தில்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது. 

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? 

பாம்பு கடித்தவரை முடிந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பாம்பு கடித்தவர்கள் அதிக பயம், பதற்றத்தில் இருந்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும். எனவே, அவரை அமைதியாக தைரியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

பாம்புக்கடித்தவரின் உடல்நிலையைப் பொருத்து, விஷமுறிவு மருந்து 1 முதல் 5 மணி நேரத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

செய்யக்கூடாதவை

பாம்பு கடித்த பிறகு ஓடக்கூடாது. 

பாம்புக்கடித்த இடத்தைச் சுற்றி துணி அல்லது கயிறு கொண்டு கட்டக்கூடாது. 

விஷத்தை உறிஞ்சி எடுக்கக்கூடாது. 

மருத்துவ அறிவுறுத்தல் இன்றி எந்தவித இயற்கை பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com