குழந்தைகளைக் குறிவைக்கும் மொபைல் 'ஆப்'(பு)கள்!

குழந்தைகளுக்கு இன்று விளையாட்டுப் பொருள், பொழுதுபோக்கு பொருள் எல்லாமே மொபைல்போன்தான். பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் யூ ட்யூப் மற்றும் சமூக வலைத்தளங்களில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றன
குழந்தைகளைக் குறிவைக்கும் மொபைல் 'ஆப்'(பு)கள்!

மொபைல் போனின் பயன்பாடும் இணையத்தின் பயன்பாடும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இன்று பெருகிவிட்டன. அதன் பயனாக இன்று சாதாரணர்களும் மொபைல் போனையும் இணையத்தையும் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. கரோனா காலத்தில் அதன் பயன்பாடு அவசியத் தேவை என்றாகிவிட்டது. 

அதிலும் குழந்தைகளுக்கு இன்று விளையாட்டுப் பொருள், பொழுதுபோக்கு பொருள் எல்லாமே மொபைல்போன்தான். பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் யூ ட்யூப் மற்றும் சமூக வலைத்தளங்களில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். 

அந்தவகையில் முன்னதாக, வணிகத்திற்காக குழந்தைகளை மையப்படுத்தி விளம்பரங்கள் எடுக்கப்பட்டன, எடுக்கப்பட்டும் வருகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கல்வி சார்ந்த பொருள்கள், உணவு வகைகள் என குழந்தைகளைக் கவரும் வண்ணம், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வண்ணமயமாக விளம்பரங்கள் எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக வணிகமும் பெருகுகிறது. 

இன்று அதேபோன்றதொரு உத்தியை மொபைல் செயலிகளும் கையாள்கின்றன. குழந்தைகள் இன்று சமூக  வலைத்தளங்களையும் யூ ட்யூப் உள்ளிட்ட செயலிகளையும் அதிகம் பயன்படுத்துவதால் அவர்களைக் கவரும் வகையில் செயலிகள் உருவாக்கப்படுகின்றன. 

பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி இன்று குழந்தைகளின் கல்வியை அடிப்படையாகக் கொண்டும் பல செயலிகள் வந்துகொண்டிருக்கின்றன. சந்தேகத்தைத் தீர்க்கும் ஆன்லைன் வகுப்புகள், கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கும் இணையதளங்கள், செயலிகள் அதிகம் உள்ளன.  

அதுபோலவே, குழந்தைகளைக் கவரும் வகையில் ஆன்லைன் விளையாட்டுகளும் வடிவமைக்கப்படுகின்றன. மேலும், அவர்களிடம் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் 'பாப் அப்' செய்திகள் வருகின்றன. அதாவது அவர்கள் விளையாடியதற்கு அவார்டு/ரிவார்டுகள் வழங்கப்படுவது, வெற்றி பெற்றால் பாராட்டுவது, ஊக்குவிப்பது போன்ற வார்த்தைகள் அவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அவர்கள் அதிக நேரம் அதில் ஈடுபடவும், தொடர்ந்து பயன்படுத்தவும் சூழ்ச்சியான வழிகள் கையாளப்படுகின்றன. 

மேலும் இன்றைய தலைமுறை குழந்தைகள் அடம்பிடித்தாவது அவர்களுக்கானத் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறனர். இதனால் மொபைல் செயலிகளின் உத்திகளும் வெற்றி பெறுகின்றன. 

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மூன்று முதல் ஐந்து வயது வரையிலான 160 குழந்தைகள் பயன்படுத்தும் செயலிகளை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அதில், ஐந்தில் நான்கு செயலிகள் குழந்தைகளைக் கவரும் வகையில் வடிவமைப்புகளைப் பெற்றுள்ளதும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் இந்த செயலிகளை எல்லாம் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

'குறைந்த பணத்தில் அழகான இந்த சிறிய விலங்குகளுடன் நீங்கள் விளையாடலாம், உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்', 'சோர்ந்துவிடாதீர்கள், அடுத்த முயற்சி செய்யுங்கள்' என்றெல்லாம் அந்த செயலிகளில் அறிவிக்கை செய்திகள் வருவதால் அதைப் பார்த்து குழந்தைகள், அவற்றை தொடர்ந்து பயன்படுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். 

முதலில் இலவசமாக அவர்களுக்கு செயலிகளை அறிமுகப்படுத்தி பின்னர் பணம் வசூலிக்கும் முனைப்பிலே பல நிறுவனங்கள் செயல்படுவதாகவும் சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. இந்த செயலிகள் விளம்பரங்கள் மூலமாகவும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால் சிறு குழந்தைகளுக்கு இந்த தந்திரங்கள் தெரிவதில்லை, பெற்றோர்கள் கூறினாலும் புரிந்துகொள்ளக்கூடிய சூழ்நிலையில் குழந்தைகளின் வயதோ பக்குவமோ இல்லை. 

99% குழந்தைகள் குறைந்தது ஒரு செயலியையாவது பயன்படுத்துவதாக ஓர் ஆய்வு கூறுகின்றது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், யூ ட்யூப் ஆகிய செயலிகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. குழந்தைகளுக்கான சில புதிய திட்டங்களையும் நிறுவனங்கள் வகுத்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

குழந்தைகள் மொபைல் போனை வாங்கிக்கொண்டு தர மறுப்பதாகக் கூறும் பெற்றோர்கள்தான் இன்று அதிகம். ஆனால், பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு அவற்றை படிப்படியாக பழக்கப்படுத்துகின்றனர். எந்தவொரு பயன்பாட்டிலும் கட்டுப்பாடு தேவை. ஆனால் சிறு வயதில் மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளை பல்வேறு உடல், மன நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தைகளின் இந்தப்போக்கு பெற்றோரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

நவீன யுகமாக இருந்தாலும், குழந்தைகளின் வாழ்வு மற்றும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு தற்போதைய குழந்தை வளர்ப்பு முறையில் மாற்றங்களை கையாள வேண்டும் என்று கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com