எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிதி மற்றும் மேலாண்மைத் துறை அமைச்சரால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை ஏதோ ஒரு வணிக நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுவது போல் உள்ளதே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காக்கும் அறிக்கையாக, மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிக்கையாக, ஏழையெளிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அறிக்கையாக இல்லை.

தி.மு.க.வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்விக் கட்டணம் ரத்து, பொது விநியோகத் திட்டத்தின்மூலம் உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதல் சர்க்கரை வழங்குவது, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 இலட்சம் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் ஏதும் தெரிவிக்கப்படாதது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதைப் பெறத் தகுதியுடையவர்கள் யார், யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும், இதன் அடிப்படையில் இந்த அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் என்பது இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்பது தெளிவாகிறது. 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிதிநிலை அறிக்கை இலக்கற்றும், எதிர்காலம் குறித்த எந்த தீர்க்கமான பார்வையும் இல்லாமல் இருக்கிறது. மக்கள் நலனுக்கு என்று இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதுமில்லை. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத் திட்டம் எந்த வகையிலும் பயன்படாது. மொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை ஓர் ஏமாற்றமளிக்கும் அறிக்கை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com