தமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். 
தமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். 
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய கட்சி அடைந்த படுதோல்வியை மறைப்பதற்காக அந்தக் கட்சி இன்றைக்கு நிராதரவாக விடப்பட்ட நிலையில், தன்னுடைய அங்கலாய்ப்புகளை இங்கே வந்து உங்களிடத்தில் பத்திரிகைப் பேட்டி என்ற வகையில் செய்தியாளர்களிடத்தில் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்.
ஜனநாயக ரீதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவை மக்கள் முழுமையாக நிராகரித்திருக்கிறார்கள் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், திமுக பெற்றிருக்கக் கூடிய மகத்தான வெற்றி, முதல்வருக்கு மக்கள் கொடுத்திருக்கக் கூடிய சிறப்பான அங்கீகாரம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் புழுங்கிப் போய், இந்த வெற்றி இன்றைக்கு ஏதோ முறைகேடான வகையிலே பெற்ற வெற்றியைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்து, வலிந்து அவர் இங்கே பத்திரிகை பேட்டியை அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த வெற்றி கள்ள ஓட்டுகளாலே பெற்ற வெற்றி என்று சொல்லியிருக்கிறார். நான் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன், வரலாற்றிலேயே முதன்முறையாக மிக அமைதியாக ஜனநாயக வழியில் எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல் நடைபெற்றிருக்கக்கூடிய ஒரே நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் இந்தத் தேர்தல். அந்தத் தேர்தலை மிக நியாயமான முறையில் நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டு, அதேபோல அந்தத் தேர்தல் நியாயமான முறையில், மிகச் சரியான வகையில் ஜனநாயகப் பாதையில் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சட்டம் ஒழுங்கிற்கு ஒரு சிறு குறையோ, பங்கமோ ஏற்பட்டுவிடாத வகையில், அந்தத் தேர்தல் மிக அமைதியான முறையில் நடந்து இன்றைக்கு மாபெரும் வெற்றியை திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் பெற்றிருக்கிறது.
அவர், இன்றைக்கு இந்தத் தேர்தலில் பல்வேறு குண்டர்கள், ரெளடிகள் எல்லாம் இறக்கி விடப்பட்டு கள்ள ஓட்டு போடுவதற்காக தயார் செய்தார்கள் என்று சொல்லுகிறார். நான் கேட்க விரும்புகிறேன், அவரது கட்சியிலிருந்து தேர்தல் வேலைகளை எல்லாம் பார்த்தவர்களையெல்லாம் அவர் அவ்வாறு குறிப்பிடுகிறாரா?
அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஒருவர், அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருந்த ஜெயக்குமார், எந்த வகையில் தேர்தல் காலத்தில் நடந்து கொண்டார்? அங்கே இருக்கக்கூடிய ஒரு நபரை பிடித்து, அவர் கள்ள ஓட்டு போட வந்ததாக இவர் புகார் சொன்னதை உரிய அதிகாரியிடத்தில் சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கக்கூடிய ஒருவர், அவரே போய் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டது மாத்திரமல்லாமல், மனித உரிமைகளை முற்றிலுமாக மீறக்கூடிய வகையில் அந்த நபருடைய சட்டையைக் கழற்றி பின் பக்கமாக கையைக் கட்டி தெருவில் தரதரவென்று இழுத்துக் கொண்டு வருகிறார் என்று சொன்னால், எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கக்கூடிய அவர், அவர் பேட்டிகளில் சொல்லக் கூடியவர்கள் எல்லாம், அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களைக் குறிப்பாக, அவருடைய அமைச்சரவையில் முன்னாள் அமைச்சராக இருந்தவரைத் தான் அவர் குறிப்பிடுகிறாரா என்ற ஐயம் எனக்கு எழுகிறது.

இன்னொன்றையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இன்றைக்கு சட்டமன்றத்தில் கூட அவர்கள் அதைப்பற்றிய ஒரு பிரச்னையை எழுப்பிவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள், உங்களிடத்திலும் சொல்லியிருக்கிறார். ஏதோ இந்த அரசு அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறது என்று. இந்த அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை. உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பிற்கு திமுக வந்தால், தவறு
செய்திருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று. அந்த வகையில் தான், இன்று சட்டத்தினுடைய ஆட்சியின் அடிப்படையில்தான், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டிருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com