தமிழர்கள் அல்லாதோருக்கும் உதவுகிற அரசாகத் தி.மு.க அரசு விளங்குகிறது: முதல்வர் 

தமிழர்கள் அல்லாதோருக்கும் உதவுகிற அரசாகத் தி.மு.க அரசு விளங்குகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அல்லாதோருக்கும் உதவுகிற அரசாகத் தி.மு.க அரசு விளங்குகிறது: முதல்வர் 

தமிழர்கள் அல்லாதோருக்கும் உதவுகிற அரசாகத் தி.மு.க அரசு விளங்குகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

அப்போது முதல்வர் ஆற்றிய உரை, மாற்றுக் கட்சியிலிருந்து இன்றைக்கு விலகி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் - இல்லை என்று சொன்னாலும், தமிழர்களுக்காக - தமிழ்நாட்டிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் நமக்கு விடிவெள்ளியாக - உற்ற தோழனாக - நம்மை காக்கும் ஒரு பேரியக்கமாக இருக்கிறது என்ற அந்த நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் உங்களை இணைத்துக்கொள்ள இங்கே வந்திருக்கிறீர்கள்.

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த நம்முடை தொப்புள் கொடி உறவுகள் – தமிழர்கள், அந்த ஈழத்தமிழர்களுக்கு பேருதவியாக பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து, இலங்கையில் இருந்து திரும்பிய தமிழ் உறவுகளுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி இருக்கும் ஆட்சிதான் நம்முடைய திமுக ஆட்சி.

அவர்களை இனிமேல் அகதிகள் என்று அழைக்கக்கூடாது – அகதிகள் முகாம் என்று அழைக்கக்கூடாது, ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்ற அதற்கு பெயர் சூட்டி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்வதற்கு, 13 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவையும் நாம் அமைத்திருக்கிறோம். கடந்த நவம்பர் 2-ஆம் தேதி வேலூர் முகாமுக்கு நானே நேரில் சென்று அதை பார்வையிட்டு வந்திருக்கிறேன்.

இப்போது இலங்கையில் என்ன நிலை என்று உங்களுக்கு தெரியும். ஒரு மோசமான நிலையில் சிக்கி, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல – அங்கிருக்கும் இலங்கை வாழ் மக்களும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எனவேதான் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் அரிசி அனுப்ப வேண்டும் - அந்த உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும் - அவர்களுக்கு வேண்டிய முடிந்த அளவிற்கு நம்மாலான சலுகைகளை - உதவிகளை செய்யவேண்டும் என முடிவெடுத்து நான் நேரடியாக தில்லிக்கு சென்றிருந்தபோது பிரதமரை சந்தித்து சொல்லியிருக்கிறேன். அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தபோதும் சொன்னேன். உள்துறை அமைச்சரை சந்தித்தபோதும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அதற்குப்பிறகு, நம்முடைய அரசின் சார்பில் தொடர்ந்து கடிதங்கள் எழுதி இருக்கிறோம்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரப்போகிறோம், நீங்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்று, அத்தனை கட்சிகளும் - எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. உட்பட எல்லாக் கட்சிகளும் - ஏன் பாஜக. உட்பட நாம் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து, தீர்மானத்தை ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்.

மத்திய அரசின் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

நிறைவேற்றியவுடன், நேற்று மாலையில் நமக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. தாராளமாக அனுப்புங்கள். நாங்கள் உதவி செய்ய காத்திருக்கிறோம். எங்கள் மூலமாக அனுப்பி வைக்கிறோம். மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள் என்று அங்கிருந்து செய்தி வந்திருக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து - அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்று அந்த இந்நிலையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com