ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்த கிருஷ்ணா: மயிலாப்பூர் இரட்டைக் கொலையில் திடுக்கிடும் தகவல்

மயிலாப்பூரில் ஸ்ரீகாந்த்  - அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கிருஷ்ணா, ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு செய்திருப்பது உள்ளிட்ட பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை செய்யப்பட்ட தம்பதி.
கொலை செய்யப்பட்ட தம்பதி.

சென்னை: மயிலாப்பூரில் ஸ்ரீகாந்த்  - அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கிருஷ்ணா, ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு செய்திருப்பது உள்ளிட்ட பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த்(65) மற்றும் அவரது மனைவி அனுராதா(60). ஸ்ரீகாந்த் குஜராத்தில் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வந்தார். மயிலாப்பூரில் சொகுசு பங்களாவில் மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் மருத்துவராக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மகளுடன் கணவன், மனைவி இருவரும் தங்கி இருந்தனர்.

நேற்று காலை சென்னை திரும்பிய அவர்களை வீட்டில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்து வீட்டில் இருந்தவற்றை கொள்ளை அடித்தனர். இவர்கள் இருவரையும் கைதுசெய்த காவலர்கள் அவர்களிடமிருந்து ஏராளமான தங்க வைர நகைகளை பறிமுதல் செய்தனர். 

பண்ணை வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஸ்ரீகாந்த் - அனுராதா உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று உடற்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது, ஸ்ரீகாந்த், அனுராதா இருவரும் கிரிக்கெட் மட்டை, மண்வெட்டியின் பிடியால் அடித்தும் கத்தியால் தாக்கியும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை நடந்த நாளுக்கு முந்தைய நாளே, வீட்டில் கோலம் போட வரும் வீரம்மாள் என்ற பெண்மணியை வழக்கம் போல காலையில் வந்து கோலம் போட வேண்டாம் என்று கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

மூதாட்டி வீரம்மாளும் காலையில் வந்து கோலம் போடாமல், 10 மணிக்கு மேல் வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று நினைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் உள்ளூர் மக்களை நம்பாமல், நேபாளத்தைச் சேர்ந்த பதன்லால் சர்மாவை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவரது மகன் கிருஷ்ணாவையும் ஓட்டுநர் வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.

கொலை செய்ய திட்டமிட்ட கிருஷ்ணா, பண்ணை வீட்டில் தங்கியிருந்த பெற்றோரை 15 நாள்களுக்கு முன்பே நேபாளம் அனுப்பிவிட்டுள்ளார். தனது மகனையும் டார்ஜிலிங்கில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளார்.

கொலையாளிகளில் ஒருவரான கிருஷ்ணாவை, ஸ்ரீகாந்தின் தந்தை ராஜகோபால் பேரனைப் போல பார்த்து வந்ததும், ஸ்ரீகாந்தும், ராஜகோபாலிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆடிட்டர் ஸ்ரீகாந்தின் தந்தை ராஜகோபால் ஓராண்டுக்கு முன்பே இறந்துவிட்டார். கிருஷ்ணாவுக்கு மட்டும் ஸ்ரீகாந்த் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

வீட்டில் வேலை செய்யும் வீரம்மாள், வீட்டு வாசலில் கோலமிட்டுவிட்டு, பின் வழியாகவே வீட்டின் பின்பக்கம் வநது சாமான்களை தேய்த்துக் கொடுத்துவிட்டு சென்று விட வேண்டும். அவர் வீட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது.

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதியை வீட்டுக்கு அழைத்து வந்த கிருஷ்ணா, அவர்கள் முதல் தளத்துக்குச் செல்லும் போதே கொலை செய்திருக்கிறார். விமானத்தில் கிளம்பிய பெற்றோர் வீட்டுக்கு வந்தார்களா என்பதை அறிய அவருடைய மகளும் மகனும் தொடர்ந்து செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் இருவரும் செல்லிடப்பேசியை எடுக்காததால் அவர்கள் சந்தேகம் அடைந்துளள்னர்.

உடனடியாக அடையாறு பகுதியில் இருக்கும் தங்களது உறவினர்களிடம் தகவல் சொல்ல, அவர்களும் தாமதிக்காமல் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர். வீடு பூட்டியிருந்ததால் சந்தேகம் வலுவடைந்து, வீட்டின் பூட்டை உடைத்துப் பார்த்துள்ளனர்.

வீடு முழுவதும் டெட்டால் ஊற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, காவலர்கள் துரிதமாக செயல்பட்டுள்ளனர்.

தம்பதிகள் சென்னை திரும்பியதுமே அவர்களை கொலை செய்து புதைத்துவிட்டால், அவர்கள் சென்னை திரும்பியது யாருக்குமே தெரியாமல் போய்விடும், அதற்குள் நேபாளம் தப்பிவிடலாம் என்ற ஓட்டுநர் கிருஷ்ணாவின் திட்டம் தவிடுபொடியானது.

இதுதொடர்பாக சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகியோருக்கு சொந்தமான இடம் விற்றது தொடர்பாக சமீபத்தில் 40 கோடி ரூபாய் பணத்தை வீட்டில் இருப்பதை பற்றி ஓட்டுநர் லால் கிருஷ்ணா முன்பு பேசியுள்ளனர்.  அந்தப் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக லால் கிருஷ்ணா திட்டமிட்டு, அவரது நண்பர் ரவி ராயுடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து நேற்று காலை மூன்று முப்பது மணிக்கு ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனை அனுராதாவை ஓட்டுநர் லால் கிருஷ்ணா கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு அழைத்து வந்து முதல் தளத்திற்கு செல்லும் போதே பின் புறத்தில் இருந்து ஸ்ரீகாந்தை கட்டையால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்திருக்கிறார். அதன் பின்பாக அனுராதாவையும் தாக்கி கொலை செய்திருக்கிறார் எனக் குறிப்பிட்டார். 

லாக்கரை திறந்து பார்த்தபோது 40 கோடி ரூபாய் பணம் இல்லாததால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். அதன் பின்னரே வீட்டில் இருந்த 70 கிலோ வெள்ளி, 9 கிலோ தங்கம் அதுமட்டுமல்லாமல் வைரம், பிளாட்டினம் என கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி உள்ளனர்.

இதில் பின்புற படுக்கை அறையில் உள்ள பெட்ஷீட் மூலமாக ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவர்களையும் கட்டி போட்டு, நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டிற்கு கொண்டு சென்றதாகவும், அங்கு ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டிருந்த குழியில் இருவரையும் போட்டு புதைத்துள்ளனர். பின்னர் ஸ்ரீகாந்தின் செல்போன் மற்றும் சில தடயங்களையும் அதன் அருகே போட்டு எரித்துள்ளதாக கண்ணன் தெரிவித்துள்ளார்.  அதன் பின்பாக அதே கார் மூலமாக திருவான்மியூர் அடையாறு கோயம்பேடு வழியாக மதுரவாயல், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திரத்துக்கு மிக வேகமாக லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராம் இருவரும் சென்றுள்ளனர்.

ஆந்திரம் செல்லக்கூடிய வழியில் உள்ள சுங்க சாவடிகளில் அவர்களுடைய செல்போன் சிக்னல் ஆகியவற்றை கண்காணித்து அதன் மூலமாக அவர்கள் செல்லக்கூடிய வழியை கண்டுபிடித்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை ஆந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அதனடிப்படையில் ஆந்திரம் போலீசார், லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராயை கைது செய்தனர். இதன் பின்பு சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராயை கைது செய்து அவர்களிடமிருந்து பல கோடி மதிப்பிலான தங்க வைர வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், நெமிலிச்சேரியில் புதைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகிய இருவரின் உடல்களையும் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர்.

மயிலாப்பூரில் கொலை நடந்த 6 மணிநேரத்தில் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com