அரசு பேருந்தில் நடத்துநரை அடித்துக் கொன்ற பயணி
சென்னையில் இருந்து விழுப்புரம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் மதுபோதையில் இருந்த பயணி தாக்கியதில், பேருந்து நடத்துநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில், மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் மதுபோதையில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் பெருமாள் அவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். டிக்கெட் எடுக்க முடியாது என மதுபோதையில் இருந்த பயணி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், போதையில் இருந்த பயணி தாக்கியதில் நடத்துநர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த பயணி பேருந்தில் இருந்து குதித்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து மயக்கம் அடைந்த நடத்துநர் பெருமாளை(54) சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நடத்துநரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபர் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன்(35) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பேருந்து நடத்துநர் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர். விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.