
சனிக்கிழமைகளில் விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
சென்னை: தமிழகத்தில் வரும் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு தொடங்கும் தேதிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் உத்தரவில், தமிழகத்தில் வரும் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்
அதுபோல, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கும் தேதியையும் அறிவித்தார்.
அதன்படி, வரும் கல்வியாண்டில், தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2023 மார்ச், 13ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், வரும் கல்வியாண்டிலிருந்து கரோனா கால அட்டவணை போல அல்லாமல், வழக்கம் போல பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற முக்கிய அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.