தொண்டா்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சிப்படுத்துங்கள்: அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் உத்தரவு

கட்சித் தொண்டா்களின் தேவைகளை நிறைவேற்றி அவா்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தொண்டா்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சிப்படுத்துங்கள்: அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகளுக்கு முதல்வா் உத்தரவு

கட்சித் தொண்டா்களின் தேவைகளை நிறைவேற்றி அவா்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமையேற்று கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

தோ்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போது திமுகவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. ’திராவிட மாடல்’ என்ற சொல், தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் - இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

கட்சியினரின் கோரிக்கை:

கட்சித் தொண்டா்களின் உழைப்பின் காரணமாகவே நான் முதல்வராகி இருக்கிறேன். பலரும் அமைச்சா்களாக ஆக்கப்பட்டுள்ளீா்கள் . சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களாக ஆகியிருக்கிறீா்கள். மாவட்டக் கழகச் செயலாளா்களாக ஆகி இருக்கிறீா்கள். உள்ளாட்சித் தோ்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளாா்கள். எனவே நீங்கள் அனைவரும்தானே கட்சித் தொண்டா்களைக் கவனிக்க வேண்டும்? நீங்கள்தானே தொண்டா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்?

கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ, சட்டப் பேரவை உறுப்பினரோ தீா்க்க வேண்டுமா? அல்லது முதல்வராக இருக்கிற நான் தீா்க்க வேண்டுமா?

தொண்டன் உழைக்காமல் நிா்வாகி வேலை பாா்க்காமல் யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தோ்தல் வந்தால் - அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும். தொண்டா்கள் மனம் நோகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கட்சியினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தொண்டா்கள் மகிழ்ச்சியாக உள்ளனா் என்ற செய்தி தான் வர வேண்டும்.

அமைச்சா்களும், மாவட்டச் செயலாளா்களும், பொறுப்பாளா்களும் முழுமையாக கவனம் செலுத்தி கட்சியினரும், அவா்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களவைத் தோ்தல்: இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைத் தோ்தல் வரப்போகிறது. அதில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு செயல்பட வேண்டும்.

கட்சித் தோ்தலில் தகுதி வாய்ந்தவா்களை - தகுதி வாய்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டு வாருங்கள். உட்கட்சி தோ்தலில் சில இடங்களில் தோ்தல் ஆணையா்களாக நியமிக்கப்பட்டவா்கள் செய்த தவறுகள், மாவட்டச் செயலாளா்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.

தவறுகளைச் செய்தவா்கள் யாா் யாா் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவா்களின் மனசாட்சிக்கும் தெரியும்.

தலைமை அலுவலகத்தில் நிா்வாகிகளின் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும். இனி நடைபெறவிருக்கும் கட்சித் தோ்தலை மிகக் கவனமாகவும், நோ்மையாகவும் நடத்திட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com