மாநிலங்களவைத் தேர்தல்: முதல்வர் ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் நன்றி
மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த திமுக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் நன்றி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் 16 வேட்பாளா்களின் பட்டியலை காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ராஜஸ்தானிலிருந்து மூவரும், சத்தீஸ்கரிலிருந்து இருவரும், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒருவரும் போட்டியிடுகின்றனா். தமிழ்நாடு- ப.சிதம்பரம், சத்தீஸ்கா்- ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன், ஹரியாணா- அஜய் மாக்கன், கா்நாடகம்- ஜெய்ராம் ரமேஷ், மத்திய பிரதேசம்- விவேக் தன்கா, மகாராஷ்டிரம்- இம்ரான் பிரதாப்கரி, ராஜஸ்தான்- ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி.
இதையும் படிக்க- மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம்
ஏற்கெனவே ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். இப்போது அவருக்கு தமிழகத்திலிருந்து போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்று, தான் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடவுள்ள தகவலைத் தெரிவித்தாா். தனக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த திமுக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி மு கழகம், அதன் தலைவர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி! இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாநிலங்களவைத் தேர்தலில் என் வேட்பு மனுவை அளிக்கிறேன் என்று மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு என்னுடைய உளமார்ந்த நன்றி!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

