இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்; புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு!

இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். 
முற்றுகைப் போராட்டம் நடத்த இளையான்குடி கண்மாய்கரை பகுதியிலிருந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த பெண்கள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர்.
முற்றுகைப் போராட்டம் நடத்த இளையான்குடி கண்மாய்கரை பகுதியிலிருந்து பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த பெண்கள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. யாருக்கும் பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டியும் அனைத்து அரசியல் கட்சியினர், ஜமாத்தார்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதன் மூலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போராட்டங்களின் தொடர்ச்சியாக இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 

இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர், மக்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் சைபுல்லாஹ், செயலாளர் துருக்கி ரபீக் ராஜா ஆகியோர் தலைமையில் இளையான்குடி கண்மாய் கரைப் பகுதியில் கூடி அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பின் இவர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிப் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

மக்கள் நல கூட்டமைப்புத் தலைவர் சைபுல்லாக் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி யாருக்கும் பயன்தராத வகையில் இளையான்குடியில் ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்யவும் இளையான்குடி நகருக்குள் உள்ள தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் தேதி அறிவிக்காமலேயே சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com