ஐஎஸ் பாணியில் உடலில் சவரம் செய்திருந்த ஜமேஷா முபீன்? அதிர்ச்சி தரும் பின்னணி!

கோவை கார் வெடிப்பில், உயிரிழந்த 25 வயதான ஜமேஷா முபீன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை வீரர்களைப் போல தனது உடல் முழுக்க சவரம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎஸ் பாணியில் உடலில் சவரம் செய்திருந்த ஜமேஷா முபீன்? அதிர்ச்சி தரும் பின்னணி!
ஐஎஸ் பாணியில் உடலில் சவரம் செய்திருந்த ஜமேஷா முபீன்? அதிர்ச்சி தரும் பின்னணி!

கோவை கார் வெடிப்பில், உயிரிழந்த 25 வயதான ஜமேஷா முபீன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படை வீரர்களைப் போல தனது உடல் முழுக்க சவரம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கோவை உக்கடம் சங்கமேஸ்வரா் கோயில் அருகே அக்டோபர் 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் (25) உடல் முழுக்க எரிந்துவிடவில்லை என்றும், சில தோல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவர் இந்த தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன்பு, அவரது உடல் முழுவதும் சவரம் செய்திருந்ததாகவும், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படுவதற்கு முன்பு விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் சில  ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அதுபோல, கோவையில் காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து போலீஸாா் கைப்பற்றிய சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.

கோவை உக்கடம் சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த 23 ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபீன் (25) உயிரிழந்தாா். இந்த வழக்கில் இதுவரை 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து கடந்த 23 ஆம் தேதி போலீஸாா் நடத்திய சோதனையின்போது, 75 கிலோ அளவிலான வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வெடிபொருள்களை ஆன்லைன் மூலம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு என்ஐஏ சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தவிர அவரின் வீட்டில் இருந்து சில காகித குறிப்புகளையும் போலீஸாா் கைப்பற்றினா். இதன் மூலம் கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் நாசவேலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், அவரது வீட்டிலிருந்து ‘சிலேட்’ ஒன்றைக் கைப்பற்றியுள்ளனா். அது தொடா்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன. இதனை ஜமேஷா முபீன் தனது கைப்பட எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

அதன் அடிப்படையில்தான் கோவை போலீஸாா் காா் வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் டிஜிபியிடம் தகவல் அளித்து உடனடியாக அவரை கோவைக்கு வரவழைத்துள்ளனா்.

கண்காணிப்பு வளையத்தில் 900 போ்: கோவை காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் இதுவரை 137 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா். இதில், கோவையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சோ்ந்தவா்கள், அவா்களின் ஆதரவாளா்கள் என சந்தேகத்துக்குரிய 900 பேரைக் கண்டறிந்துள்ளனா்.

இவா்களின் பெயா் விவரம் கொண்ட பட்டியலை வைத்து அவா்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், சில அமைப்புகளின் தரவுகளைச் சேகரிக்கும் வகையில் 25 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய நபா்களிடம் அளித்து பதில்களைப் பெற்று வருகின்றனா். இதில், பெயா், முகவரி, கல்வித் தகுதி, சமூகவலைதள கணக்குகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

உடல் முழுக்க சவரம் செய்வது ஏன்?
அதாவது, 2008ஆம் ஆண்டில் ஈராக்கில் அமெரிக்கப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபடக் காத்திருந்த 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆறு பேரின் உடல்கள் முழுக்க முழுக்க சவரம் செய்யப்பட்டிருந்தன. இதற்கு, "அவர்கள் ஆறு பேரும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த தயாராக இருந்தது அர்த்தமாகிறது" என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, பயங்கரவாதிகள் சவரம் செய்வது ஏன் என்பது குறித்து அமெரிக்க ராணுவத்தினர் ஆராய்ந்தபோது, முஸ்லிம்களின் முந்தைய வழக்கப்படி, இறந்த உடல்களை சுத்தம் செய்து, சிலரது வழக்கத்தில் சவரம் செய்வதும் இருந்துள்ளது. எனவே, தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி உயிரிழப்பவர்களுக்கு அந்த முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெறாது என்பதாலும், தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துபவர்களுக்கு உடல் என்பதே இல்லாமல் போகலாம் என்பதாலும், தற்கொலைப் படை வீரர்கள், தாக்குதல் நடத்துவதற்கு முன்பே தங்களது உடலை சவரம் செய்து கொள்கிறார்கள் என்றும் விளக்கம் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com