பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் பணிநீக்கம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை பதிவாளர் ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

தொலைதூர கல்வி இயக்ககத்தில் நடந்த  முறைகேடு தொடர்பாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்  அருகே கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப் பல்கலைக்கழகத்தின்  கீழ் செயல்பட்டு வரும்  தொலைதூர கல்வி இயக்ககத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில்  உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தியது,   கல்வித் தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை தொலைதூர கல்வியில்  சேர்த்தது, படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது என பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது.  

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அப்போது  பெரியார் பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கத்தின் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் விசாரணை நடத்த  கமிட்டி அமைக்கப்பட்டது.  இந்த கமிட்டியினர் அப்போது தொலைதூரக் கல்வி இயக்குகத்தின் இயக்குநராக இருந்த குணசேகரன், துணைப் பதிவாளராக இருந்த ராமன் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.  இந்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், அறிக்கையில் தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பெறப்பட்டது. 

அதன்படி, தற்போது பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளராக பணியாற்றி வரும் ராமன் கடந்த  இரு வாரங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராமன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராமன் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில்,  அவரது ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பிறப்பித்துள்ளார்.  

இதேபோல தொகுப்பூதிய பணியாளரான அன்பரசியும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com