மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

மாற்றுத்திறனாளிகள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக பரிசீலித்து, விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
சென்னை கோபாலபுரத்தில் 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தம்பதிகளுக்கான திருமணத்தை தலைமையேற்று  நடத்தி வைத்து வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை கோபாலபுரத்தில் 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தம்பதிகளுக்கான திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மாற்றுத்திறனாளிகள் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக பரிசீலித்து, விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

சென்னை கோபாலபுரத்தில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 11 ஆம் ஆண்டு 54 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தம்பதிகளுக்கான திருமணம் ஞாயிற்றுக்கிழமை (நவ.20) நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். 

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த, நெஞ்சார்ந்த, உளமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் வாழ்வில் எல்லா நலமும் சூழட்டும். உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்.

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்று அண்ணா சொன்னார். நான் இப்போது சொல்கிறேன், ஏழையின் சிரிப்பிலே கருணாநிதியைக் காண்போம், அண்ணாவையும் காண்போம் என்ற நிலையில் நம்முடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

இன்றைக்கு நான் ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கிறேன். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த உயர்ந்த பொறுப்பில் உங்களால் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன். நான் பிறந்து - வளர்ந்து - படித்து - ஆளாகிய பகுதி இந்த ஆயிரம் விளக்கு பகுதிதான். அதிலும் குறிப்பாக இந்த கோபாலபுரம் பகுதிதான்.

நான் மட்டுமல்ல - நம்முடைய தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து நம்மையெல்லாம் ஆளாக்கிய நம்முடைய தலைவர் கருணாநிதி வாழ்ந்த பகுதி, அவர் கோலோச்சிய இடம், இந்த கோபாலபுரம்.

கோபாலபுரம் என்பது தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் - இன்னும் சொன்னால் இந்தியத் துணைக் கண்டத்திற்கே ஒரு தலையாய இடமாக, மறக்க முடியாத இடமாக வரலாற்றில் விளங்கிக்  கொண்டிருக்கிறது.

கோபாலபுரத்திற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ குடியரசுத் தலைவர்கள் வந்திருக்கிறார்கள். எத்தனையோ வெளிநாட்டு தலைவர்களெல்லாம் வந்து போயிருக்கிறார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குரிய இந்தப் பகுதியில் உங்களுடைய  திருமணம் நடைபெறுகிறது. இதைவிடப் பெருமை உங்களுக்கு வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட பெருமையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நம்மை ஆளாக்கிய நம்முடைய தலைவர் கலைஞருடைய இதயத்தில் இருக்கக்கூடிய  உங்கள் அனைவருடைய திருமணம் இங்கு நடந்தேறி இருக்கிறது.

உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையால் வெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் என்று சுயமரியாதைப் பெயர்சூட்டி வாஞ்சையோடு அழைத்தவர் தான் நம்முடைய மறைந்த முதல்வர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தைதான் தலைவர் கருணாநிதி.

எனக்கு மட்டுமல்ல - என் தங்கை கனிமொழிக்கு மட்டுமல்ல - கருணாநிதி பெயர் சூட்டியது,  உங்களுக்கும் பெயர் சூட்டியது அவர்தான். அந்த வகையில், எங்களது குடும்ப விழா, நம்முடைய குடும்ப விழா என்ற அந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் நாமெல்லாம் கலந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளையானது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது  கடமையை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறது.

கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில், இந்த அமைப்புக்கு சிறந்த சமூக சேவையாளர் விருதை வழங்கி ஏற்கனவே பாராட்டி இருக்கிறார். 

தமிழக அமைச்சரவையில் பல துறைகள் இருக்கிறது. அதில் ஒவ்வொருவருக்கும் பல துறைகளை கருணாநிதி ஒதுக்கினார்கள். முதல்வரைப் பொறுத்தவரை, ஒரு முக்கியமான நான்கு துறைகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, காவல் துறை, சட்டம்-ஒழுங்கு இதுபோன்று சில முக்கியமான துறைகளை மட்டும் தான் வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால், எல்லா துறைகளையும் கவனிப்பதால், பல நிகழ்ச்சிகளுக்கு போக வேண்டும், பல வேலைகளுக்கு போக வேண்டும். ஆகவே, எல்லா துறைகளையும் பிரித்து கொடுத்து விடுவார்கள். ஆனால், முதல்வர் கருணாநிதி பொறுப்பிற்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகள் என்ற ஒரு தனித் துறையை உருவாக்கி, அந்தத் துறையை தன்கீழ் வைத்துக் கொண்டவர் தான் அன்றைக்கு நம்முடைய முதல்வர் கருணாநிதி. மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தத் துறையை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரே பலமுறை சொல்லியிருக்கிறார், இது என் நெஞ்சுக்கு நெருக்கமான துறை இந்தத் துறை என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

நமது ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

நகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம். 

அடையாள அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022-ஆம் நிதியாண்டில் ரூ.813 கோடியே 63 லட்சம் -  2022-23 நிதியாண்டில் ரூ.838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு ரூ.1,702 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்தின் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினையும் பரிசுத் தொகையாக,  பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் உங்களுக்காக, ஏதோ உங்களுக்கு சலுகை என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம், உங்களுக்குத் தர வேண்டியது எங்களது கடமை, அந்த அடிப்படையில்தான்  செய்து கொடுக்கிறோம். மற்ற கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலித்து, விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட அமைப்பின் சார்பில் உங்களைப் போன்றோர்களையும் அழைத்துப் பேசி, அதை எப்படி செய்வது, அதற்கு எப்படி நிதி ஒதுக்குவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்துவிட்டு போகக்கூடாது. அறிவித்துவிட்டு போய் விடலாம், அதை நிறைவேற்ற வேண்டும். அதுதான், கருணாநிதி ஆட்சி. அந்த நிலையில் இருந்து, நிச்சயம் அதையும் நிறைவேற்றித் தருவோம் என்ற அந்த உறுதியை அளிக்கிறேன்.

மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து வாழுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com