இம்முறை அதிக மழை! விவசாயிகள் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகள்!

வடகிழக்கு பருவமழையால் கிடைக்க வேண்டிய நீரின் அளவு இயல்பை விட அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழக உழவர் நலத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இம்முறை அதிக மழை! விவசாயிகள் கட்டாயம் செய்ய வேண்டிய பணிகள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் கிடைக்க வேண்டிய நீரின் அளவு இயல்பை விட அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழக உழவர் நலத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் முடிய வடகிழக்குப் பருவத்தில், 448 மிமீ (48%) மழையளவு கிடைக்கிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை இயல்பாக பெய்ய வேண்டிய 288.3 மி.மீட்டருக்கு 327.9 மி.மீ மழை அதாவது 14 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது.

 2 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவிகிதம் கூடுதலாகவும், 12 மாவட்டங்களில் 20 முதல் 59 சதவிகிதம் கூடுதலாகவும், 21 மாவட்டங்களில் இயல்பான மழையும் பெய்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. 

விவசாயிகள் பொதுவாக பின்பற்ற வேண்டிய  நடவடிக்கைகள்

1.     விளை நிலங்களில் உள்ள சிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள,   செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.

2.   மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை உரிய வடிகால் வசதியினை உருவாக்கி வெளியேற்ற  வேண்டும்.

3.   மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

4.   மழைக்காலத்தில் புகையான் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 0.03 சதவீத மருந்தினை எக்டருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

5.   தற்போது, மேகமூட்டமாக உள்ளதால், பயிரின் தேவைக்கும் அதிகமாக இரசாயன உரமிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நெல் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

1.     மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.   நெல் பயிர் நீரில் மூழ்கி இருந்தால், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது மழை நின்று நீர் வடிந்து வருவதால், ஊட்டச்சத்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,  18 கிலோ ஜிப்சத்துடன், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, இரவு முழுவதும் வைத்திருந்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.

3.   போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும்.

4.   முன்சம்பா பருவத்தில் நடவு செய்துள்ள நெல் பயிர் தண்டு உருளும் பருவம் முதல் பூக்கும் பருவத்தில் இருந்தால், ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா,  1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com