தள்ளாடும் தொழில் துறை... மின் கட்டண உயர்வைக் கைவிடுக! - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தமிழகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில் துறையினர், மின் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம
தள்ளாடும் தொழில் துறை... மின் கட்டண உயர்வைக் கைவிடுக! - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

தமிழகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழில் துறையினர், மின் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி கூறியிருப்பதாவது: 

பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றால் தொழில் துறையினர் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் மையமான கோவையில் சிறு, குறுந் தொழில் துறையினர் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர்.

மேலும், கரோனா தொற்று பரவல் காரணமாக  2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளாலும் தொழில் நிறுவனத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது, தொழில் துறையினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

குறு, சிறு நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்டிசிடி பிரிவுக்கான (112 கேவி) மின் கட்டணம் 60 முதல் 70 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும், மாதாந்திர நிலைக்கட்டணமும் 150 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக நீக்க வேண்டும். எல்டிசிடி பிரிவுக்கு முன்புபோல ரூ.35 மட்டுமே நிலைக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தொழில் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கோவையில் கதவடைப்பு, உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளனர்.

மின் கட்டண உயர்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்திப்பது தொடர்ந்தால், ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியிலும் பெரிய தாக்கம் உண்டாகும். மாநிலத்தின் பொருளாதாரமும் தேக்கமடையும். ஊழல், முறைகேடுகளைத் தடுப்பது, நிர்வாகச் சீரமைப்பு என தமிழ்நாடு மின் வாரியத்தை லாபகரமாக இயக்க பல வழிகள் உள்ள நிலையில், கட்டண உயர்வை அமல்படுத்துவது மட்டுமே தீர்வைத் தராது.

பிற மாநிலங்களின் கடும் போட்டியை சந்தித்து வரும் தமிழகத்தின் சிறு, குறுந் தொழில் துறையைப் பாதுகாக்க, உடனடியாக மின் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே, பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தைத் தடுப்பதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com