நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் அவர் பேசியதாவது, எந்தவகையிலும் யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யும் பா.ஜ.க. எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் செல்வார்கள் பா.ஜ.க. என்பதை மறந்து விடாதீர்கள்.

தங்களது சாதனைகளாகச் சொல்வதற்கு எதுவும் இல்லாததால், நம்மைப் பற்றிய அவதூறுகள் மூலமாக அரசியல் நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. மதத்தை, ஆன்மீக உணர்வுகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. அரசியலையும் ஆன்மீகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதால் தமிழ்நாட்டில் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.

அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி குளிர்காயப் பார்க்கிறது பா.ஜ.க. அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கலகலத்துக் கிடக்கிறது அ.தி.மு.க. உறுதியான வலிமையான தலைமை அந்தக் கட்சிக்கு அமையாததால் நான்கு பிரிவுகளாக சரிந்து கிடக்கிறது அதிமுக.

தி.மு.க.வை எதிர்ப்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும், எந்தக் காலத்திலும் அதிமுகவுக்கு இருந்தது இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சியில்லாமல் கிடக்கிறது.

எந்தக் கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும் -வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டும்தான் வெல்லும் - அதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு திகழ்ந்து கொண்டு இருக்கிறது.

சாதனைகளாக எதையும் சொல்ல முடியாத பா.ஜ.க.வும் - சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அ.தி.மு.க.வும் – தேர்தல் களத்தில் பொய்ப்பரப்புரைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். இதனை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

மக்களுக்கு நாம் செய்து கொடுத்த நலத்திட்டங்களின் மூலமாக எதிர்கொள்ள வேண்டும். நமது சாதனைகள்தான் அவர்களது புகார்களுக்கான பதிலாக இருக்க முடியும்.

நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் முகங்களில் மலர்ச்சியைப் பார்க்கிறேன். நாற்பதுக்கு நாற்பது நாம்தான் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. முழு வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்று நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள். இதற்கான நடைமுறைகள், வழிமுறைகள் தலைமைக் கட்சியின் சார்பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த பூத் கமிட்டிக்குள் அனைத்து உறுப்பினர்களும் – அனைத்து தரப்பினரும் இடம்பெறும் வகையில் - அனைவரையும் அரவணைத்து - நியமனம் செய்யுங்கள்.

அடுத்த இரண்டு மாதத்திற்குள் இந்த பணியை நீங்கள் முழுமையாக நாம் முடித்திருக்க வேண்டும். கட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. நீங்கள் வென்று விட்டீர்கள். அதன்பிறகும் மற்றவர்களோடு போட்டியோ பொறாமையோ வேண்டாம்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் - தமிழ்நாட்டின் நிலைமை இப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

தமிழர்களை தமிழர்கள் என உணர வைத்த இயக்கம். அப்படி உணர்ந்த தமிழர்களை உரிமைக்காக போராட வைத்த இயக்கம். போராடிய தமிழர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வர வைத்த இயக்கம். தேய்ந்த தெற்கை தலைநிமிர வைத்த இயக்கம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு இல்லத்திலும் பட்டதாரிகளை உருவாக்கிய அறிவியக்கம். இன்று உலகம் முழுக்க தமிழர்கள் வேலைகளுக்காக, தொழில்களுக்காக செல்லக் காரணமான கட்டுமானத்தை உருவாக்கிய இயக்கம். ஒரு மாநிலம்தானே என்று இல்லாமல் - ஒரு நாட்டுக்கான அனைத்துத் தன்னிறைவும் பெற்றதாக தமிழ்நாட்டை உயர்த்திய இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிய இயக்கம். பெண்ணினத்தை பேராளுமை உள்ளவர்களாக ஆக்கிய இயக்கம்.

அத்தகைய இயக்கத்துக்கு நான் தலைவராகவும் - நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புக்கும் வந்துள்ளீர்கள், இதனை விட வாழ்வில் பெருமை என்ன இருக்க முடியும். இந்தப் பெருமையையும் புகழையும் நமக்குத் தந்த கட்சிக்காக எந்நாளும் உழைப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com