கொடநாடு வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
கொடநாடு
கொடநாடு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளைத் தொடா்பான வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இதுவரை 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது தொடர்பான ஆவணங்களை உதகையில் மாவட்ட நீதிபதி முருகனிடம், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நேற்று(திங்கள்கிழமை) ஒப்படைத்தார். 

இதையடுத்து, இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் காவல்துறையிடம் இருந்து, விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் பெற்றுள்ளனர். சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவில் குன்னூர் டிஎஸ்பி சந்திர சேகர் இடம்பெற்றுள்ளார். 

சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையை விரைவில் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கொடநாடு வழக்கு

கொடநாடு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 போ் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பங்களாவில் இருந்த பல்வேறு பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இது தொடா்பாக சோலூா் மட்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், கொள்ளை கும்பலுக்குத் தலைமை வகித்த சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட கேரளத்தைச் சோ்ந்த 10 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சயான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.ஜி. சுதாகா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு சசிகலா, முன்னாள் எம்எல்ஏ வி.சிஆறுக்குட்டி உள்பட 316க்கும் மேற்பட்டவா்களிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்குத் தொடா்பாக தொடா்ந்து பல்வேறு சாட்சிகளிடம் தொடா்ந்து கோவையில் உள்ள பிஆா்எஸ் காவல் அலுவலகத்தில் ஐ.ஜி சுதாகா் தலைமையில் தனிப் படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறைத் தலைவா் டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com