ஒருபுறம் ஆப்ரேஷன் மின்னல்; மறுபுறம் ஐஜி வீட்டில் கொள்ளை: இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் ரெளடிகளை ஒழிக்கும் ஆப்ரேஷன் மின்னல் நடந்து கொண்டிருக்கும் போதே, காவல் ஐஜி வீட்டில் திருடு போனச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ரெளடிகளை ஒழிக்கும் ஆப்ரேஷன் மின்னல் நடந்து கொண்டிருக்கும் போதே, காவல் ஐஜி வீட்டில் திருடு போனச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ரெளடிகள் மற்றும் கொள்ளையர்களை கைது செய்யும் ஆப்ரேஷன் மின்னல் மூலம் 72 மணிநேரத்தில் 3,905 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளார் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்,

"கடந்த 16 மாத கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலையது, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் போன்றவை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிலைமை மிகமிக மோசமாகிவிட்டது. இதனால் மக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்ரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார்.

இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,390 ரெளடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்ரேஷன் மின்னல் பற்றியும், இதன் காரணமாக ரெளடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவல்துறைத் தலைவரின் இந்த அறிக்கையை தமிழக மக்கள் படிக்கும் போதே, சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜி. பூர்வீக வீட்டில் திங்கட்கிழமை அன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், ஊஊகூஏ, கேமரா, ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன என்று நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன.

பணியில் உள்ள ஒரு ஐ.ஜி-யின் வீட்டிற்குள் ஆப்ரேஷன் மின்னலால் வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரெளடிகளும், கொள்ளையர்களும் 24 மணி நேரத்தில் மீண்டும் எப்படி வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா என்பதற்கு சரியான விளக்கமில்லை. இவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும், இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com