
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : அமைச்சர் முத்துசாமி
சென்னை: வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, பொங்கல் பண்டிகைக்குள் திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
பண்டிகைக் காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் கைது
கிளாம்பாக்கத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம், கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக, பேருந்து நிலையத்தை வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து அமைச்சர் முத்துசாமி தகவல்களை வெளியிட்டிருந்தார்.
ஆனால், தற்போது பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட்டால், பொங்கல் பண்டிகையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்பதால், பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து நிலையத்தைத் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. இளைஞர் தற்கொலையில் திடீர் திருப்பம்: போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியை கைது
புதிய பேருந்து நிலையத்திற்கான அடிப்படை கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. அதன் பயன்பாட்டு வசதிகள், பூச்சு வேலை, மின்சார இணைப்பு உள்ளிட்ட பணிகள்தான் நிலுவையில் உள்ளன. அவையும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டுவிட்டால் ஜனவரி மாதமே புதிய பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என்பதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் இந்த முறை போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.