போக்சோ வழக்கு விவரங்கள் வாட்ஸ்ஆப்பில்: தமிழக காவல்துறையின் புதிய சேவை

போக்சோ வழக்குகளின் விவரங்கள், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அளிக்கும் மிக முக்கிய சேவை ஒன்றை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியிருக்கிறது. 
போக்சோ வழக்கு விவரங்கள் வாட்ஸ்ஆப்பில்: தமிழக காவல்துறையின் புதிய சேவை
போக்சோ வழக்கு விவரங்கள் வாட்ஸ்ஆப்பில்: தமிழக காவல்துறையின் புதிய சேவை

மதுரை: போக்சோ வழக்குகளின் விவரங்கள், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அளிக்கும் மிக முக்கிய சேவை ஒன்றை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியிருக்கிறது. 

முதற்கட்டமாக தென்மாவட்ட காவல்துறையினர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில், பாலியல் தொடர்பான குற்ற வழக்குகளில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை காவல்துறையினர், புகார்தாரர்களுக்கு செல்லிடப்பேசி வாயிலாக விவரங்களை அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தெற்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார் இது பற்றி பேசுகையில், போக்சோ சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தவர்களுக்கு எங்களது தனிப்பட்ட கவனிப்பை அளிக்கும் வகையில், இந்த புதிய சேவை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், நீதிமன்றத்தில் நடக்கும் போக்சோ வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து புகார்தாரர்கள் மற்றும் பாலியல் குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். எனவே, அவர்கள் பயனடையும் வகையில், வழக்கு நிலவரத்தை, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி குறுந்தகவலாகவோ அல்லது வாட்ஸ்ஆப் மூலமோ அனுப்பும் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தசேவை தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம், பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைதான நபர்கள், பிணை கேட்டு மனு தாக்கல் செய்யும்போது அது குறித்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது பெற்றோர் அல்லது புகார் அளித்தவர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிய வரும்போது, அந்த மனு விசாரணைக்கு வரும் நாளும் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். அன்றைய நாளில் நீதிமன்றத்துக்கு வந்து மனுவை எதிர்க்கவும், பிணை கிடைப்பதை தடுக்கவும் வழி ஏற்படும் என்கிறார்கள்.

இந்த சேவை குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தவர்கள் கூறுகையில், இதுபோன்ற ஒரு சேவை தொடங்கப்படும் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. அதுவும் எங்களுக்குப் புரியும் வகையில் எளிய தமிழில் தகவல்கள் வருகின்றன என்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com