
போடியில் 12 வருடத்திற்குப் பின் வந்த ரயில் எஞ்சினை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
போடி-மதுரை அகல ரயில் பாதையில் போடியிலிருந்து தேனி வரை மட்டும் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் புதன் கிழமை நிறைவடைந்த நிலையில் தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் குழுவினர் புதன் கிழமை போடி-தேனி ரயில் பாதையை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ரயில் பாதை பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென வியாழக்கிழமை தேனியிலிருந்து ரயில் எஞ்சின் போடி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மெதுவாக இயக்கப்பட்ட ரயில் எஞ்சின் போடி வரை இயக்கப்பட்டு மீண்டும் போடியிலிருந்து தேனி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. விரைவில் சோதனை ரயில் இயக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் புத்தாண்டு முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படிக்க: பெண்ணின் துப்பட்டாவை இழுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல்
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட போடி-மதுரை ரயில் சேவையில் பணிகள் முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பின் ரயில் எஞ்சின் போட்டிக்குக் கொண்டு வரப்பட்டதை அறிந்து பொதுமக்கள் கூட்டமாகக் கூடி ரயில் எஞ்சினை வரவேற்றனர். ஏற்கனவே போடி-மதுரை அகல ரயில் பாதையில் தேனியிலிருந்து மதுரை வரை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மே மாதம் 26ஆம் தேதி முதல் ரயில் சேவை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.