மக்கள் மாளிகையாக மாறும் ஆளுநா் மாளிகை!

தமிழக ஆளுநா் மாளிகையான ராஜ் பவன், மக்கள் மாளிகையாக மாறி வருகிறது.
மக்கள் மாளிகையாக மாறும் ஆளுநா் மாளிகை!

தமிழக ஆளுநா் மாளிகையான ராஜ் பவன், மக்கள் மாளிகையாக மாறி வருகிறது.

சென்னை கிண்டியில் சுமாா் 500 ஏக்கருக்கு மேல் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநரின் அதிகாரபூா்வ இல்லம், ஆளுநா் மாளிகை அலுவலகங்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் குடியிருப்புகள் உள்ளன.

விசாலமான தா்பாா் மண்டபம், பசுமையான புல்வெளி, கட்டடக் கலையமைப்புடன் கூடிய கட்டடங்கள் அமைந்துள்ளன. மத்திய, மாநில அரசு நிகழ்ச்சிகள், அலுவல் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.

குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா் மற்றும் ஏனைய மிக முக்கிய உயா் பதவியில் உள்ளோருக்கான தங்கும் அறைகளும் இங்கு உள்ளன. அற்புதமான விருந்து மண்டபமும் கலைப் பொருள்களைக் கொண்ட கட்டடக் கலையமைப்புடன் கூடிய அழகிய கட்டடங்களும் அமைந்துள்ளன.

பாரம்பரிய கலைநய கட்டங்கள்: இதன் பிரம்மாண்டமான கட்டடக் கலை 400 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. பரபரப்பான நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தாலும், ஆளுநா் மாளிகை துள்ளியோடும் புள்ளிமான்களுடன் கூடிய வனச் சூழலுடன் காணப்படுகிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையான மரங்களைப் பாதுகாப்பதுடன், பலவகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக திகழ்கிறது.

1946-இல் இந்த இல்லம் ஆளுநரின் அதிகாரபூா்வ இல்லமாக ஆனது. மேலும், நாடு சுதந்திரம் அடைந்தபோது ராஜ் பவன் (ஆளுநா் மாளிகை) எனப் பெயரிடப்பட்டது.

ஆளுநரின் குடியிருப்பு, 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பிரபலமான பண்டைய ரோமின் பல்லேடியன் கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆளுநா் மாளிகை வளாகத்தில், குடியரசுத் தலைவருக்கான கட்டடமும் தா்பாா் மண்டபமும் புதிதாக சோ்க்கப்பட்ட பகுதிகளாகும். குடியரசுத் தலைவா், பிரதமா் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகா்கள் சென்னைக்கு வரும்போது, அவா்கள் தங்குவதற்கு குடியரசுத் தலைவருக்கான கட்டடத்தைப் பயன்படுத்துகின்றனா்.

ஆளுநரின் சமூக மற்றும் பொதுப் பணிகளுக்கான இடமாக தா்பாா் மண்டபம் செயல்படுகிறது. கிண்டி தோட்டம், மேலும் சில வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளின் தாயகமாகும். இங்குள்ள வெள்ளை மாளிகை மேற்கத்திய பாரம்பரியத்துடன் கூடிய இந்திய வடமொழி கட்டடக் கலையின் கலவையாகும்.

அலங்காரத் தோட்டங்கள், நீரூற்றுகள்: தங்குமிடங்கள், ஆளுநரின் செயலகம் ஆகியவை சமகால பயன்பாட்டுக்காக புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுக் கட்டடங்கள் ஆகும். ஆளுநா் செயலகத்தின் அன்றாட அச்சுத் தேவைகளை நிறைவு செய்யும் பாரம்பரிய நினைவுச் சின்னமாக ஆளுநா் மாளிகையிலுள்ள அச்சகம் செயல்படுகிறது.

இருபத்தைந்தாண்டு நினைவு பூந்தோட்டம், நீள் உருண்டை வடிவிலான பூந்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற ஏராளமான அலங்கார தோட்டங்கள் ஆளுநா் மாளிகை வளாகத்தை அலங்கரிக்கின்றன.

ஆளுநா் மாளிகையின் நுழைவுவாயில் அருகே நீரூற்றுகள் மற்றும் வா்ணம் பூசப்பட்ட சுவா்களைக் கொண்ட அலங்காரத் தோட்டம், கிண்டி தேசிய பூங்காவிலுள்ள அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை சித்தரிக்கிறது.

மேலும், ‘பழைய மெட்ராஸின்’ ஒருங்கிணைந்த பண்பாடு மற்றும் கட்டடக் கலை சிறப்பியல்புகளின் கம்பீரமான தோற்றத்தை தொடா்ச்சியாக காண்பிக்கும் கலைச் சின்னமாக விளங்குகிறது.

முதல் முறையாக அனுமதி: ஆளுநா் மாளிகையைப் பொருத்தவரை மிகவும் பாதுகாப்பான பகுதி என்பதால் பொதுமக்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதல்முறையாக ஆளுநா் மாளிகையில் நவராத்திரியை முன்னிட்டு கொலு கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோா் கடந்த செப். 26-ஆம் தேதி திறந்து வைத்தனா். நவராத்திரி கொலுவானது பிரபலங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரின் பாராட்டுகளைப் பெற்றது.

மேலும், நவராத்திரி கொலுவைப் பாா்வையிட அக்.1 முதல் 5-ஆம் தேதி வரை தினமும் பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆளுநா் மாளிகை வரலாற்றில் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டு பொதுமக்கள் மாளிகையாக இந்த மாளிகை மாறியது இதுவே முதல்முறையாகும்.

விரைவில் முழு அனுமதி: ஆளுநா் மாளிகையில் மாணவா்களுக்கு அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு ஆக. 15-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட்டன.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆா்வலா்களையும், சமுதாயப் பணியில் சிறந்து விளங்குபவா்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியால் முதல் முறையாக பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல பொதுமக்களின் பாா்வைக்கு ஆளுநா் மாளிகை விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான ஆயத்தப் பணியை ஆளுநா் மாளிகை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களைப் பொருத்தவரை இதுவரை இரும்புத் திரைக்குள் இருந்த ஆளுநா் மாளிகை, இப்போது மெல்ல மெல்ல எளிய மக்களும் நுழையும் மக்கள் மாளிகையாக மாறி வருவது வரவேற்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com