தூத்துக்குடி-மீளவட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு கடலோர காவல்படை வீரர் இன்று உயிரிழந்தார்.
தூத்துக்குடி- மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு இன்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாகல் சந்திரா மாஜி மகன் பிஜய் குமார் மாஜி (21) என்பதும், இவர் இந்திய கடலோர காவல்படையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் சென்னை-தூத்துக்குடி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.