ஆடைத்துறை நிறுவனங்களுக்கு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆடைத்துறையில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

ஆடைத்துறையில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க,ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம், ரஷியா-உக்ரைன் போர் மற்றும் மேற்கில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல காரணிகளால் ஆடை ஏற்றுமதித் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மாதந்தோறும் வளர்ச்சி விகிதம் இப்போது கூர்மையான சரிவைக் காட்டுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை பூர்த்தி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஏற்றுமதி தொகுப்புகளில் ஒன்றான திருப்பூர் அலகில் 95 சதவிகித குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்திற்கான கொள்முதல் ஆணைகள் தற்போது சுமார் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், குறைந்த தேவை காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் ஏற்றுமதி பிரிவுகளும் அவற்றின் குறு சிறு நிறுவன விநியோகஸ்தர்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தொழிலாளர் வர்கத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வர, ஆடைத் துறையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) உடனடியாக அறிவிக்குமாறும், புதிய திட்டத்தின் கீழ் 20 சதவிகிதம் கூடுதல் பிணையமற்ற கடன் வழங்கப்படலாம் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.