
எடப்பாடி கைது தொடர்பாக மணப்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருகின்றனர்.
இந்நிலையில், மணப்பாறை முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் தலைமையில் அதிமுகவினர் பயணியர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழக அரசிற்கும், கைது நடவடிக்கைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சாலையின் மத்திய பகுதிக்கு வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கோபி ஆகியோர் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர். இதில் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...