கொட்டும் மழையில் சபரிமலையில் தரிசனம்!

சபரிமலையில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். 
கொட்டும் மழையில் சபரிமலையில் தரிசனம்!

சபரிமலை: சபரிமலையில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 18-ம் தேதி முதல் தொடர்ந்து 22ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கொட்டும் மழையிலும் நேற்று பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் எழுந்தருளியுள்ள ஹரிஹரசுதன் ஐயப்பனைக் காண ஆண்டுதோறும் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், இந்தியாவில் மட்டுமின்றி. சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். 

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு, துளசி மாலையணிந்து ஒரு மண்டலம் (41 நாள்கள்) விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குப் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மண்டலப் பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களிலும், விஷுப் பண்டிகையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். 

தமிழ் மற்றும் கேரள மாதங்களின் முதல் 5 நாள்கள், இருமுடி கட்டிவரும் ஐயப்ப பக்தர்கள், புனிதப் படிகளான 18 படிகள் ஏறி ஐய்யப்பனை தரிசனம் செய்ய தேவஸ்வம் போர்டு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

பம்பாவில், நீலிமலை ஏறும் முன்பே, கரோனா தொற்று முன் நடவடிக்கைகளால் பக்தர்களிடம் தகுந்த ஆதாரங்களை சோதித்தப் பிறகு சபரிமலைக்குச் செல்ல அனுமதி வழங்கினர். பம்பா, நீலிமலை, சரங்கொத்தி மற்றும் சபரிமலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது. பக்தர்கள் கொட்டும் மழையிலும் சரணம் கோஷம் போட்ட படியே, சபரிமலைக்கு வந்தனர். 

ஐயப்பனின் இருமுடியை தலையில் சுமந்து 18 படிகளையும் வணங்கிய படியே சன்னிதானம் அடைந்தனர். தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு மேல்சாந்தி நம்பூதிரிகள், வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர வாத்தியங்களுடன் 18 படிகளுக்கும் பூஜை செய்து, தீபாராதனைக் காண்பிக்கப்பட்டன. ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட பதினெட்டாம் படி பூஜை நேரத்தில், பக்தர்களை படியேற அனுமதிக்கப்படவில்லை. 

மறைந்த மகா குரு சுவாமி எம்.என்.நம்பியார் சுவாமியின் இளைய மகன் குருசுவாமி மோகன் நம்பியார் சுவாமி தலைமையில், 90 சுவாமிகள் மாலையணிந்து சபரிமலை யாத்திரை வந்தனர்.

சபரிமலை யாத்திரை குறித்து குருசுவாமி மோகன் நம்பியார் கூறியது, 

மகா குருசுவாமி எம்.என்.நம்பியார் சுவாமியின் ஆசீர்வாதங்களுடன் சபரிமலை வந்து, ஐயப்பனை தரிசனம் செய்துள்ளோம். மாத பூஜைகளிலும் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அனைவருக்கும் ஐயப்பன் அருள் கிடைத்து நலம் பெற வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com