சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னையில் குவிந்த பட்டாசுக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை நேற்று (அக்.24) கொண்டாடப்பட்டது. காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இருப்பினும், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் அபாயகரமான கழிவுகள் என்பதால், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இக்கழிவுகளை தனியாக சேகரித்து. கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 23.10.2022 அன்று 7.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், 24.10.2022 அன்று 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், இன்று (25.10.2022) 139.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசுக் கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்திற்கு 2 வாகனங்கள் என 30 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள பட்டாசுக் கழிவுகளை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com