கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பான தகவல்களை கோவை உக்கடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.


கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பான தகவல்களை கோவை உக்கடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

கோவை, உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காா் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்)சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மேலும், ஜமேஷா முபீனின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 75 கிலோ அளவிலான பொட்டாசியம் நைட்ரேட், சாா்கோல், அலுமினியம் உள்ளிட்ட வெடிபொருள் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனிடையே, ஜமேஷா முபீனுடன் தொடா்பில் இருந்ததாகக் கூறி யுஏபிஏ சட்டத்தின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண் 2) செந்தில்ராஜா முன்பு ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். 

கோவையில் காா் வெடிவிபத்து நேரிட்டதை அடுத்து மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீஸாா், துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 

இந்நிலையில், கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பான தகவல்களை புதன்கிழமை காலை 10 மணி முதல் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

ஜமேஷா முபினின் பின்னணி, வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் கோவை உக்கடம் ஈஸ்வரன் கோயில் பகுதியில் கார் வெடிப்பு வழக்கை விசாரணை தொடங்கி நடத்தி  வருகின்றனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தகவல்களை திரட்டினாலும் தற்போது வரை விசாரணை கோவை போலீசார் வசமே உள்ளது என கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
காவலர்கள் நிறுத்த முயன்றபோது கார் வெடித்தது?

இந்நிலையில், முன்கூட்டியே கிடைத்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் கோவையில் தீவிர சோதனை நடத்தி வந்தனர். 

அதனடிப்படையில் சம்பவத்தன்று ஜமேசா முபின் ஓட்டிச் சென்ற காரை காவலர்கள் காரை நிறுத்த முயன்றபோது கார் வெடித்தது.

காவல்துறையினரை பார்த்த பிறகு காரை முபின் வெடிக்கச் செய்திருக்கலாம் என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதுமே பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

என்ஐஏ அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com