
தமிழக மீனவா்கள் 7 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
வைகோ : ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமைப் பெற்றுள்ள தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடா் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
அன்புமணி: ராமேசுவரம் பகுதி மீனவா்கள் 7 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் பத்தாவது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். தமிழக மீனவா்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.