பாரத் ஜோடோ பாத யாத்திரை: தேசியக் கொடியை கொடுத்து தொடங்கி வைக்கும் முதல்வர்

நாடு முழுவதும் பாரத் ஜோடோ என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். அவரது இந்த பாத யாத்திரையை தேசியக் கொடியினை வழங்கி தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
பாரத் ஜோடோ பாத யாத்திரை: தேசியக் கொடியை கொடுத்து தொடங்கி வைக்கும் முதல்வர்

நாடு முழுவதும் பாரத் ஜோடோ என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். அவரது இந்த பாத யாத்திரையை தேசியக் கொடியினை வழங்கி தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

வருகிற செப்டம்பர் 7 முதல் பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்கிறார். முன்னதாக, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவகத்தில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர், கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து தேசியக் கொடியினைப் பெற்று தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்க உள்ளார்.

 3,570 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாத யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்குகிறார். அங்கிருந்து அவர் செப்டம்பர் 11ஆம் தேதி கேரளத்தை சென்றடைகிறார். அடுத்த 18 நாட்களுக்கு அவர் கேரளத்தில் பாத யாத்திரை மேற்கொண்டு  செப்டம்பர் 30ல் கர்நாடகத்தை சென்றடைகிறார். கர்நாடகத்தில் 21 நாட்களுக்கு இந்த பாத யாத்திரை நீள்கிறது.

பின்னர், வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உட்பட 9 பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். 20 பேர் 25லிருந்து 30 வயதுக்குள்ளும், 51 பேர் 31லிருந்து 40 வயதுக்குள்ளும், 38 பேர் 41லிருந்து 50 வயதுக்குள்ளும் உள்ளனர்.

கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாத யாத்திரை வடக்கு நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம்,கொச்சி,நிலம்பூர்,மைசூரு,பெல்லாரி,ராய்ச்சூர்,விக்ரபாத்,ஜல்கயோன்,இந்தூர்,ஆழ்வார்,தில்லி,அம்பாலா,பதான்கோட், ஜம்மு சென்று ஸ்ரீ நகரில் முடிவடைகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேராத சாதரண மக்கள் 37,000 பேர் இந்த பாரத் ஜோடோ யாத்திரையிரைக்காக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com