வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் 23 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் 23 பேர் கைது

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதிக்கு பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைப்படி 7 நாள்கள் அடைப்பு, 7 நாள்கள் திறப்பு என மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த பல வருடங்களாக 5 நாள்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. 2 நாள்களுக்கு உரிய தண்ணீர் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தே வேறு பகுதிகளுக்கு திருடப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அரசாணைப்படி தங்களுக்குச் சேர வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்புச் சங்க விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குத் தொடரப்பட்டு அரசாணைப்படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் நீதிமன்றத்தை அவமதித்து அதிகாரிகள் ஒரு தரப்புக்கு ஆதரவாக தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளக்கோவில் பொன்பரப்பி அருகே 5 நாள்களில் பாசனத் தண்ணீர் மதகை அடைக்க அலுவலர்கள் வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் விவசாயிகள் மதகு மேல் அமர்ந்தும், வாய்க்கால் தண்ணீரில் குதித்தும் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்ததால் 8 பெண்கள், 15 ஆண்கள் கைது செய்யப்பட்டு வெள்ளக்கோவில் தாராபுரம் சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதகை அடைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூடுதலாகத் தண்ணீர் கேட்கவில்லை. விதிமுறைப்படி எங்களுக்குச் சேர தண்ணீர் அவசியம் தேவையென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com